2012-02-09 16:05:33

இந்தியாவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்


பிப்.09,2012. இந்தியாவுக்கும் ஐரோப்பிய அவைக்கும் இடையே இவ்வெள்ளியன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு, இந்தியாவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக அமைய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு கூறியுள்ளது.
ஆசிய கண்டத்திலும் உலக அளவிலும் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியிருப்பதைக் காண முடிகிறது. ஆயினும், இந்த முன்னேற்றங்களுக்கு இணையாக அந்நாட்டின் மனித உரிமை காக்கப்படுதல் முன்னேறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உயர் அதிகாரி Lotte Leicht கூறினார்.
தலித், பழங்குடியினர், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பல்வேறு சாரார் மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் இந்தியாவில் பெருகி வந்துள்ளன என்று இந்த கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும், இவை எதுவும் வலுகுறைந்த மக்களின் உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இவ்வெள்ளியன்று இந்தியாவுக்கும் ஐரோப்பிய அவைக்கும் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளின்போது ஐரோப்பிய அவை இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டிய பரிந்துரைகளை இந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஐரோப்பிய அவையின் தலைவர்கள் Herman Van Rompuy, மற்றும் Jose Manuel Barroso ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.