2012-02-08 16:00:28

இந்தியத் திருஅவை வன்முறைகளைச் சந்தித்தாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து பின் வாங்காது - கர்தினால் கிரேசியஸ்


பிப்.08,2012. இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சமுதாய அநீதிகளைக் களையும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியத் திருஅவையின் மீது, அடிப்படைவாதக் குழுக்கள் வன்முறைகளை மேற்கொண்டாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து திருஅவை பின் வாங்காது என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், ‘சிறந்ததொரு இந்தியாவை உருவாக்குவதில் திருஅவையின் பங்கு’ என்ற தலைப்பில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ள பொதுக் கூட்டத்தைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
சமுதாய அநீதிகளைக் களைய திருஅவை மேற்கொள்ளும் பல்வேறு பணிகள் பல சுயநல அமைப்புக்களைப் பாதிப்பதால், அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மதமாற்றம் என்ற வீண் பழியைத் திருஅவையின் மீது சுமத்தி, வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இந்திய மக்கள் தொகையில் 3 விழுக்காடு அளவே எண்ணிக்கை கொண்ட திருஅவை உறுப்பினர்கள், இந்திய சமுதாயத்தைச் சிறந்ததொரு எதிர்காலம் நோக்கி வழி நடத்துவதில் தொடர்ந்து சளைக்காமல் உழைப்பார்கள் என்று கர்தினால் கிரேசியஸ் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.