2012-02-07 16:00:23

திருத்தந்தை : குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது மிகவும் முக்கியம்


பிப்.07,2012. குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் இச்செயலானது, திருஅவையின் சொந்த புதுப்பித்தல் நடவடிக்கையோடு சேர்ந்து இடம் பெற வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகெங்கும் உள்ள பல ஆயர்களும், துறவற சபைகளின் தலைவர்களும் உண்மையான கிறிஸ்துவின் வழியில் சென்று இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறார்க்கு உதவுவதற்கு இக்கருத்தரங்கு உதவும் என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
சின்னஞ்சிறு சகோதரர்க்குச் செய்யும் ஒவ்வொருப் பிறரன்புச் செயலும் தனக்கே செய்வதாகும் என்பதை நம் ஆண்டவர் இயேசு நமக்கு நினைவுபடுத்துகின்றார் என்பதையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.
இவ்வியாழன் வரை நடைபெறும் இந்த நான்கு நாள் கருத்தரங்கில், நூற்றுக்கும் அதிகமான ஆயர்கள், துறவற சபைகளின் தலைவர்கள், மருத்துவர்கள், இறையிலாளர்கள், மேய்ப்புப்பணியாளர்கள், உளவியல் நிபுணர்கள் என 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.