2012-02-07 15:15:06

கவிதைக் கனவுகளுடன் இணைந்து வரும் விவிலியத்
தேடல் - திருப்பாடல் 102


RealAudioMP3 வேடிக்கை வாழ்க்கையில் வாடிக்கையாய் சுமக்கிறோம் துன்பங்களை
மறைக்கும் துன்பங்கள் மறைவதில்லை மறுபிறப்பு பெறுகின்றன
கூட்டிச் சேர்கின்றன துன்பங்கள், பின் கழித்து அழிகின்றன இன்பங்கள்
வலிகளை இயல்பாய் சுமக்கிறோம் துன்பங்களோடு இலவச இணைப்பாய்
உலக உயிர்களில் மிச்சம் இருக்கிற எச்சங்களாய்
துன்பங்கள் தூக்கி சுமக்கும் போது மட்டும்
சுமையாய் இறக்கிய பின் இலகுவாய்
மென்மையாக உணர்கிறோம் துன்பம் மிகுந்த வலிகளை மன உறுதியுடன்
நீண்ட வாழ்க்கையில் சீண்டிய துன்பங்கள் அழிவதில் உன் வாழ்க்கை இனிக்கிறது....

அன்பார்ந்தவர்களே! நாம் அடியோடு வெறுக்கக்கூடிய ஆனால் நம்மை விட்டு நீங்காத ஒன்று உண்டு என்றால் அது துன்பம்தான். துன்பம் என்பது யாருக்கும் பிடிக்காது. ஆனால் நம் வாழ்வின் பெரும்பகுதியை நமக்குப் பிடிக்காத இந்தத் துன்பத்தைப் பற்றிப் பேசுவதிலும், சிந்திப்பதிலும், அத்துன்பத்திலேயே உழல்வதிலுமே செலவிடுகிறோம் என்பது நாம் உணர்ந்திராத உண்மை. மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது. உலகில் துன்பம் இல்லாதவரைக் காண்பது அரிது. பெரியவர் முதல் சிறியவர் வரை எதாவது ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது.
வறுமை, வேலையின்மை, கடன் தொல்லை, வியாபாரத்தில் நட்டம், தொழில் பிரச்சனைகள், வம்பு வழக்குகள், வீண்பழிகள், குடும்பத்தில் குழப்பங்கள், தீராத நோய்கள், விபத்துக்கள், அகால மரணம், குழந்தை பாக்கியமின்மை என விதவிதமான துன்பங்கள் மக்களை வாட்டி வதைக்கின்றன. இத்துன்பப் புயலிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். துன்பங்களைத் தாங்க முடியாமல் சிலர் போதைக்கு அடிமையாகின்றனர்; சிலர் சித்தம் கலங்கி பைத்தியமாகின்றனர்; சிலர் தஙகளையே மாய்த்துக் கொள்கின்றனர்.

அன்பார்ந்தவர்களே! நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 102. துன்புற்ற தனிமனிதர் ஒருவருடைய புலம்பல் இது. தனிமனிதரின் துன்பங்களோடு, சீயோனுடைய ஏக்கத்தையும் அவற்றையெல்லாம் தீர்க்கக்கூடிய ஆற்றல் இஸ்ரயேலின் கடவுளுக்கு மட்டுமே உள்ளதென உள்ளத்தின் ஆழத்திலிருப்பதையும் எடுத்துச் சொல்லும் திருப்பாடல் இது என விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்திருப்பாடல் எழுதப்பட்டு பலநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதை வாசிக்கும் போது, ஏதோ இன்று துன்புறும் மனிதர்கள் புலம்புவதைப் போலவும், இறைவனிடம் மன்றாடுவதைப் போலவும் உள்ளது. இன்று துன்பத்தில் உடைந்து போகும் மனிதர்கள் உடல் நலிவுற்று, சதை ஒட்டிப்போய், எலும்போடு எலும்பாக, தூக்கமின்றி, கண்ணீரோடு வாழ்கிறார்கள். இதைப்பார்க்கும் பலரும் ஏளனம் செய்கிறார்கள். ஆறுதல் சொல்லவோ, தேற்றவோ யாரும் இல்லாமல் தனிமையிலே காலத்தைக் கழிக்கிறார்கள்.
இதைத்தான் இத்திருப்பாடலின் பின்வரும் சொற்றொடர்கள் நமக்குச்சொல்கின்றன. திருப்பாடல் 102: 3-11
என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூளையென எரிகின்றன.
என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.
என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.
நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.
நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.
என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்; என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.
சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.
ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.

வாழ்வில் துன்பங்கள் உருவாகின்ற விதம் பற்றியும் அவற்றைக் கையாளும் விதம் பற்றியும் இன்று நாம் சிந்திப்போம். துன்பங்கள் இருவகைப்படும். வெளிப்படையான துன்பம், மற்றும் உள்ளார்ந்த துன்பம். உடல்நலம், வேலை, உறவுப்பரிமாற்றம், வீடு, குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏற்படும் பின்னடைவுகளை வெளிப்படையானத் துன்பங்கள் எனலாம். இந்த வெளிப்படையானத் துன்பங்கள் உள்ளார்ந்த தாக்கங்களை உருவாக்கும் போது, அவற்றை எதிர்கொள்கின்ற திறமை, அவற்றைக் கையாளுகின்ற பக்குவம் மிகவும் அவசியம். எதிர்கொள்ளும் திறமையும், கையாளுகின்ற பக்குவமும் இல்லாதபோது அவை உள்ளார்ந்த துன்பங்களாக மாறுகின்றன. இதன் விளைவாக தூக்கமின்மை, தலைவலி, உடல்வலி, சோர்வு, ஆர்வமின்மை என வெளிப்படையான துன்பங்கள் உருவாகின்றன.
உதாரணமாக, திடீரென ஏற்படும் வானிலை மாற்றத்தால் குளிரான காற்று வீசுகிறது. எதிர்பாராத குளிர்காற்று உடலுக்கு ஒத்துக்கொள்ளததால் தலைவலி, சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வெளிப்படையானத் துன்பங்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லையே, வேலைக்குப் போகாவிட்டால் என்ன சொல்வார்கள் என உள்ளார்ந்த தாக்கங்களை ஏற்படுத்தி அதன் விளைவாக கவலை, பயம் போன்ற உள்ளார்ந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு, வெளிப்படையான துன்பங்கள் உள்ளார்ந்த துன்பங்களைத் தோற்றுவிப்பதும், உள்ளார்ந்த துன்பங்கள் வெளிப்படையான துன்பங்களைத் தோற்றுவிப்பதும் மாறி மாறி நடக்கிறது. தனிமனிதரின் துன்பங்கள் அவரை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, அவரோடு இணைந்து குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்களையும் பாதிக்கிறது.

துன்பத்தை மறக்க, தற்காலிகமாக ஒதுக்கி வைக்க மனிதர்கள் கண்டுபிடித்த ஒன்று போதை. உடல்வலியை மறக்க போதை, குடும்பக் கஷ்டத்தை மறக்க போதை, நடந்தவற்றை, ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மறக்க போதை என போதையைத் தங்கள் துன்பங்களுக்குத் தற்காலிகமான மருந்து என நினைக்கிறார்கள். இவ்வாறு தற்காலிக மருந்தாகக் கருதப்படும் போதை, நிரந்தரத் துன்பத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கு இதோ ஓர் உதாரணம். கடந்த புதனன்று தினமலரில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. சென்னை அம்பத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் வசிக்கின்றனர். நண்பர்களோடு எப்போதாவது குடிக்கப் பழகிய குடும்பத்தலைவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை எழுந்தது. இச்சண்டையை மறக்க மேலும் குடித்தார். ஒரு கட்டத்தில் குடியை நிறுத்த அவரால் முடியவில்லை. குடிப்பழக்கத்தைவிட ஆசைப்பட்டாலும் அதை விடமுடியவில்லை என நொந்து வருந்தி தீக்குளித்தார் அவர். அதைப்பார்த்த மனைவி அவரைக் காப்பாற்றப் போனார். இன்று இருவரின் நிலைமையும் கவலைக்கிடம் என்று செய்தி கொடுக்கப்பட்டிருந்தது.

அன்பார்ந்தவர்களே! நமக்குப் புதிதாக ஒரு துன்பம் வந்து விட்டால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என நம் மனதும், அறிவும் தேட ஆரம்பித்துவிடுகின்றன. அக்கணத்தில், நம் மனதில் இருப்பதெல்லாம் எப்படியாவது அத்துன்பத்திலிருந்து வெளிவந்து விடவேண்டும் என்பது மட்டும் தான். அதை மட்டுமே சிந்திக்கும் நம் மனதும், அறிவும் உளைச்சலுக்கும், சோர்வுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகின்றன. பல சமயங்களில் படபடப்பின் உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன . இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவருக்குக் கேட்கும் அளவுக்கு நம் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில், துன்பத்திலிருந்து வெளிவர நாம் எடுக்கின்ற அவசர முடிவுகள் இன்னும் பல துன்பங்களைக் கொண்டு வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். அல்லது நாமே அனுபவத்தால் உணர்ந்திருப்போம. எனவே துன்பங்களைக் களைவதை விடவும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அவற்றில் முதலாவதாக நான் சொல்ல விரும்புவது துன்பங்களைப் பற்றிய நமது கண்ணோட்டம், மனப்பாங்கு மாற வேண்டும்.

நாம் துன்பத்தை எதிர்மறையாக மட்டும்தான் பார்க்கிறோம். ஆனால், துன்பம் என்பது எதிர்மறையானது மட்டுமல்ல, சில நேரங்களில் நேர்மறையானதாகவும், இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும் இருக்கும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். என்ன அன்பர்களே, துன்பங்களை எப்படி நேர்மறையாக பார்க்கமுடியும் என்று தோன்றுகிறதா? நமக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் பலர் துன்பங்களை நேர்மறையாகப் பார்த்திருக்கிறார்கள். இதோ அவர்கள் வாழ்ந்து அனுபவித்துச் சொன்னவை கவிதை வரிகளாக:
துன்பங்கள் எதற்கு?!
துன்பங்கள் துவண்டு போவதற்கல்ல...
தூங்கிவிட்ட துணிவைத் தட்டி எழுப்ப...
துன்பங்கள் சோர்ந்து போவதற்கல்ல...
சுறுசுறுப்பின் ஊற்றைக் கண்டு கொள்ள...
துன்பங்கள் வீழ்ந்து போவதற்கல்ல...
எப்பொழுதும் எழும் தன்னம்பிக்கை பெற...
துன்பங்கள் மண்ணோடு போவதற்கல்ல...
மண்ணில் வீழ்ந்து உயிராகும் விதையாக...
துன்பங்கள் வெம்பிப் போவதற்கல்ல..
வெற்றியின் இரகசியங்களைக் கற்றுத் தெளிந்திட...
வாழ்வில் துன்பங்கள் எதற்கென்பது
இப்போது புரிந்தது எனக்கு!

துன்பங்கள் நம்மைத் திக்கித்திணற வைப்பவை மட்டுமல்ல. நமக்கு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித்தந்த, சொல்லித் தருகின்ற ஆசிரியர்களும் தான்.
சற்று நினைவுபடுத்திப்பாருங்கள். நமக்குத் தடுப்பு ஊசி போடப்பட்டபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கூட்டியிருப்போம். வலி 2 நாட்களுக்கு நீடித்திருக்கும். அது ஒரு துன்பம்தான். அதை நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம். ஆனால் அந்த தடுப்பு ஊசி போடவில்லையெனில் போலியோ, அம்மை நோய்களுக்கு பலியாகியிருப்போம் என்பது நமது அனுபவப்பாடம். புல்லாங்குழலை எடுத்துக்கொள்வோம். மூங்கில் குச்சி தன் மீது துளைகள் இடப்படும் போது ஏற்படுகின்ற வலி, வேதனை, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதால், ஏற்றுக்கொள்வதால்தான் இரம்மியமான இசையைத்தரும் புல்லாங்குழலாக மாறுகிறது. தங்கத்தை எடுத்துக் கொள்வோம். தங்கம் நெருப்பில் புடமிடப்படும்போதும், அடித்து, வளைக்கப்படும்போதும் ஏற்படுகின்ற வலி, வேதனைகளைத் தாங்கிக் கொள்வதால்தான் கண்ணைக்கவரும் அணிகலனாக மாறுகிறது. எல்லாராலும் விரும்பி வாங்கப்படுகிறது. அதே போல் நம்முடைய துன்பங்கள் நம்மை உருவாக்கியிருக்கின்றன. நாம் தாங்கிக் கொண்ட வலியும், வேதனையும்தான் நம்மை உயர்த்தியிருக்கின்றன என்பதை மறந்துவிடமுடியாது. எனவே அவற்றை நேர்மறையாகப் பார்க்க வேண்டும்.

துன்பத்தை நேர்மறையாக பார்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாதான் இருக்கும் ஆனால் செயல்படுத்த முடியுமா?” என்ற கேள்வியும், “தனக்கு வந்தால்தான் தலைவலி தெரியும்” என்ற சொல் வழக்கும் நினைவுக்கு வருகின்றன.
துன்பத்தை நேர்மறையாகப் பார்க்கும் போது, அது நம்மை மனஅழுத்தத்திற்கு இட்டுச் சென்றுவிடாமல் எளிதாகக் கையாள்வதற்கான மனப்பாங்கு பிறக்கிறது என்பதை அனுபவித்து உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள். யாரும் செய்தார்களா? என்று கேட்காமல், நல்லது என்றால் அதை நாம் ஏன் கடைபிடிக்கக் கூடாது என்ற நேர்மறைக் கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டும். உப்பு சப்பில்லாத காரியங்களையெல்லாம் கடைபிடிக்க முயல்கிற நாம், நம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான காரியத்தை ஏன் கடைபிடிக்க முயலக்கூடாது?

துன்பம் இல்லாத மனிதர்கள் இல்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதாவது ஒரு உருவத்தில் துன்பம் நம்மைக் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. துன்பம் இல்லாமல் வாழ்வதென்பது உப்பில்லாத தண்ணீரைக் கடலில் எடுப்பதற்கு முயற்சிப்பதைப் போன்றதாகும். எனவே துன்பங்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற உண்மை நம்மோடு இரண்டறக் கலக்க வேண்டும். அதற்காக, துன்பங்களோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மால் முடிந்தவரை துன்பங்களைக் களைய வேண்டும். துன்பங்களைக் களைய எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்கெல்லாம் முதன்மையாக அவற்றைக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.
ஒருவருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளதென்று வைத்துக்கொள்வோம். புற்றுநோயை அகற்றி காப்பாற்ற முடியாத இறுதிநிலை என்று மருத்துவர் கை விரித்து விட்டார். அப்போது என்ன செய்வோம்? உயிரைக்காக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், அந்த புற்றுநோயோடு இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருக்கட்டும் என்று நினைக்க மாட்டோமா? வாரத்திற்கு ஒருமுறை இரத்ததை மாற்றி அவரது வாழ்நாளை நீட்ட மாட்டோமா?
அதே போல துன்பம் என்பது நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கக் கூடியது. ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று என துன்பம் படையெடுத்து வந்து கொண்டேதான் இருக்கும். துன்பம் வரும்போது கலக்கம் வரும். ஆனால் நம்மையே சுதாரித்துக் கொண்டு தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். “நாம் பயப்படுகிறோம் எனத் தெரிந்தால் பூனையும் புலியாக மாறும். நாம் எதிர்த்து நின்றால் புலியும் பூனையாகும்” என்று சொல்வார்கள்.. எனவே துன்பத்தைக் கண்டு கலங்கத் தேவையில்லை. மாறாக, அதைக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும். பிரச்சனையை நேரில் பார்க்கும்போது, பெரிய துன்பம்போலத் தெரியும். ஆனால், தைரியத்தோடு நெருங்கும்போது, அது ஒன்றுமில்லாத சிறு துரும்பாக மாறிவிடும்.








All the contents on this site are copyrighted ©.