2012-02-06 15:28:15

வாரம் ஓர் அலசல் – மகிழ்ச்சி மக்கள் எங்கே?


பிப்.06,2012. RealAudioMP3 Eric Weiner என்பவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய பொது வானொலியில், வெளிநாட்டுச் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர். மக்கள் எங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் எனபதைத் தெரிந்து கொள்வதற்காக, இவர் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். முதலில் இவர் சென்ற நாடு நெதர்லாணட்ஸ். அந்நாட்டில் Rutt Veenhoven என்ற பேராசிரியரைச் சந்தித்தார். Journal of Happiness Studies என்ற இதழை நடத்தும் Veenhoven ம், இவரைச் சேர்ந்தவர்களும் உலக அளவில் மகிழ்ச்சி பற்றிய ஆய்வை நடத்தி விபரங்களைச் சேகரித்து வைத்திருப்பவர்கள். இவர்கள் நடத்திய ஆய்வில், “எதையும் எதிர்மறையாகச் சிந்திக்கின்றவர்களைவிட நேர்மறையாக நோக்குகிறவர்களும், தனியாக வாழ்கிறவர்களைவிட திருமணமானவர்களும், நோயாளிகளைவிட நலமாக இருப்பவர்களும், ஆலயம் செல்லாதவர்களைவிட ஆலயம் செல்கின்றவர்களும், எதுவும் செய்யாமல் இருப்பவர்களைவிட, ஏதாவது செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். மேலும், பணக்காரர்கள், ஏழைகளைவிட அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை” என்று தெரிய வந்ததாகக் கூறியிருக்கிறார். இந்த விபரங்களை அறியவந்த Weinerக்கு, நெதர்லாண்ட்ஸ் மக்கள் பற்றி விசாரித்த போது, அவர்கள் அவரது கணிப்புப்படி மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் அவர் சுவிட்சர்லாந்து சென்றார். சுவிட்சர்லாந்து வங்கிகள், சுவிட்சர்லாந்து கைக்கடிகாரங்கள், சாக்லேட் இனிப்புகள் பற்றி நமக்குத் தெரியும். ஏரிகளும் மலைகளும் நிறைந்த இயற்கைவளம் நிறைந்த பணக்கார நாடு இது. ஆனால் Weiner சுவிட்சர்லாந்து சென்ற போது, இவையெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் போதுமானவையாக அவர் உணரவில்லை. உலகில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சுவிட்சர்லாந்து. சட்டப்படி கருணைக்கொலை செய்து கொள்வதற்கு பிற நாடுகளிலிருந்து மக்கள் சுவிட்சர்லாந்து வரும் அளவுக்கு, அந்நாட்டில் கருணைக்கொலைகள் தாராளமாகக் இடம் பெற்று வருகின்றன. வாழ்வைப் பற்றிக் கவலைப்படாத இம்மக்கள் மகிழ்ச்சியைப் பற்றியாக் கவலைப்படுவார்கள் என்ற எண்ணத்தில் Weiner தனது ஆய்வுப் பயணத்தை வேறு நாடுகளுக்குத் தொடர்ந்தார்.
மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளியே தேடுவது அர்த்தமற்றது. அது வெளியில் கிடைக்கவும் செய்யாது. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடத்தில் அதனைத் தேடக் கூடாது. கடந்த பல நாட்களாக ஐரோப்பாவில், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப் பொழிவு. பல இடங்கள் பனிக்குன்றுகளாகவே காட்சி தருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மைனஸ் 35 டிகிரி உறைநிலைக்குத் தட்பவெப்ப நிலை குறைந்துள்ளது. கடும் குளிரில் மக்கள் பலர் இறந்துள்ளனர். பல இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுவிட்டது. பல விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. செர்பிய நாட்டில் ஒரு கிராமத்தில் 11 ஆயிரம் பேர் கடும் குளிரால் தவிக்கின்றனர். இத்தாலி தலைநகர் உரோமையில், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த வார இறுதியில் பெய்த பனியினால், பேருந்துகள் ஓடவில்லை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆயினும், இதே உரோமையில் பல வளாகங்களிலும் தெருக்களிலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை அள்ளி வீசி ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வைப் பார்த்த போது, ஒருவருக்குத் துன்பமாய் இருப்பது வேறொருவருக்கு இன்பமாய் இருக்கிறது என்று சிந்திக்க வைத்தது.
இது மட்டுமல்ல, பொதுவாகவே ஒரே நிகழ்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியாகவும் இன்னொரு சாராருக்கு வேதனையாகவும் இருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் சில மாதங்களில் காய்ச்சல் வரும். அதற்குப் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், நுண்கிருமிக் காய்ச்சல் என்று பலவாறு பெயரிடப்படுவதும் உண்டு. காய்ச்சல் காலம் மருத்துவர்களின் பணப்பெட்டி நிறையும் காலம், ஆனால் காய்ச்சல் வந்தவர்களுக்குப் பணப்பெட்டி குறையும் காலம். இப்படி சில எடுத்துக் காட்டுக்களைச் சொல்லலாம். எனவே மகிழ்ச்சி என்பது சொத்து சுகத்திலோ, பதவியிலோ, பட்டத்திலோ இல்லை. ஏழையும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். தீராத நோயாளியும், ஏன், சாவின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளியும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
வழக்கமாக, புற்றுநோய் முற்றிய நிலையில் அந்நோய்க் கண்டறியப்பட்டால், அந்நோயாளி, இன்னும் இத்தனை நாட்களுக்குத்தான் உயிர் வாழ்வார், எனவே அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வது வழக்கம். இவ்வுலகில் இன்னும் சிறிது காலமே வாழ்வோம் என்று தெரிந்தும், மகிழ்ச்சியோடு இருந்து உயிர் நீத்த புற்று நோயாளிகள் சிலரை நேரில் பார்த்திருக்கிறோம், சிலர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். தாய்லாந்து நாட்டு மருத்துவமனை ஒன்றில், மார்புப் புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்த Kung என்ற பெண்ணின் கடைசி ஆசையை மருத்துவர்கள் இச்சனிக்கிழமையன்று நிறைவேற்றி வைத்துள்ளனர். அதாவது, Damien Messner என்ற ஆஸ்திரேலியக் குடிமகனை Kung திருமணம் செய்துள்ளார். இன்று, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக Kung தெரிவித்துள்ளார். இப்பெண்ணைத் தாக்கியிருந்த புற்றுநோய்க் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டது. இப்போது அந்நோய் முற்றி, அவர் இறக்கும் நிலைக்கும் வந்து விட்டார்.
அருளாளர் Chiara Badano என்ற 18 வயது இளம்பெண், இத்தாலியின் சவோனா (Savona) நகரில் எலும்பு புற்றுநோயால் தாக்கப்பட்டு, 1990ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி உயிரிழந்தவர். 16 வயதில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென தண்டுவடத்தில் வலி ஏற்பட்டதால் அது, osteosarcoma என்ற மிகக் கடுமையான எலும்பு புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டது. Focolare என்ற மாபெரும் பக்த இயக்கத்தை ஆரம்பித்த Chiara Lubich என்பவர், இந்த இளம்பெண்ணை “ஒளி” என்றே அழைத்தார். அந்த அளவுக்கு இப்பெண், நோயின் கடும் வேதனையிலும், தன்னைச் சந்திக்க வந்தவர்களுக்கு மகிழ்ச்சியான முகத்துடன், ஒளியை ஊட்டுபவராக இருந்திருக்கிறார். திருஅவையும், Chiara Badano வை, 2010ம் ஆண்டு செப்டம்பரில் அருளாளர் நிலைக்கு உயர்த்தியது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், Chiara Badano பற்றிக் குறிப்பிட்டார். Chiara Badano, தனது இளம் வயதில் கடும் நோயினால் தாக்கப்பட்டார். அவரைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும், அவர் ஒளியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தார். எனினும், நாம் உடல்நலமில்லாமல் இருக்கும் போது மனிதருடைய அருகாமை தேவைப்படுகின்றது. எனவே நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பதற்கு வார்த்தைகளைவிட அவர்களுடன் அருகில் இருப்பது மிகவும் முக்கியம் என்று திருத்தந்தை கூறினார். RealAudioMP3
வட இலண்டனில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Chickenshed நாடகக் கம்பெனியை உருவாக்கியவருள் ஒருவரும், அதன் இயக்குனருமான Mary Ward என்பவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இரண்டு விதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர். 63 வயதாகும் மேரி, ஒரு நடிகர். புற்றுநோய்களுக்கான எல்லா சிகிச்சைகளையும் பெற்று இன்றும் தனது தொழிலில் தொய்வு ஏற்படாமல் இருந்து வருகிறார். இரண்டு மகன்களுக்குத் தாயான மேரி சொல்கிறார் – “புற்றுநோயோடு நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்” என்று. மேரியும் மகிழ்ச்சியோடு இருக்கிறார். அன்பர்களே, புற்றுநோயாளிகள் எல்லாருமே இறப்பதில்லை, எத்தனையோ பேர் சிகிச்சைக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன், தங்களது பணிகளைத் திறமையாகச் செய்து வருகிறார்கள். உலக நலவாழ்வு நிறுவன அதிகாரி மருத்துவர் Andreas Ullrich சொல்கிறார RealAudioMP3 ் – “வாழும் முறைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட புற்று நோய்களைத் தடுக்க முடியும். ஆயினும், இந்நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் இறப்பார்கள்” என்று.
பிப்ரவரி 4ம் தேதியன்று அனைத்துலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தினத்தையொட்டிப் பேசிய WHO நிறுவன அதிகாரி மருத்துவர் Renu Garg, “புற்றுநோய், உயிர்க்கொல்லி நோய்தான். தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் ஆண்டுதோறும் 11 இலட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்” என்று. எனினும், “ஒன்றிணைந்து முயற்சித்தால் இந்நோயைக் கட்டுப்படுத்துவது இயலக்கூடியதே” என்று, இவ்வுலக தினத்தன்று WHO நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர RealAudioMP3 ். சத்தான உணவு, உடல்பயிற்சி, மதுபானத்தைக் கட்டுப்படுத்துதல், உடல் எடையை அளவோடு வைத்துக் கொள்ளுதல், கதிரியக்கம் மற்றும் நச்சுகலந்த வேதியப் பொருட்கள் இருக்குமிடத்தில் இருப்பதைத் தவிர்த்தல், புகைப்பிடித்தலையும் புகையிலை மெள்ளுவதையும் தவிர்த்தல், கடும் வெயிலில் இருப்பதைக் குறைத்தல், மனஅழுத்தம் மற்றும் பதட்டம் தவிர்த்தல் போன்றவைகள் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று நலவாழ்வு அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள்.
1597ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, ஜப்பானின் நாகசாகியில் 26 கத்தோலிக்கர்கள் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் மூவர் ஜப்பானிய இயேசு சபை அருள்தந்தையர்கள், ஆறுபேர் வெளிநாட்டுப் பிரான்சிஸ்கன் அருள்தந்தையர்கள். மற்றவர்கள் சிறார்கள் உள்ளிட்ட பல பொதுநிலை விசுவாசிகள். இவர்கள் சிலுவையில் அறையப்பட்டும் ஈட்டியால் குத்தப்பட்டும் கொல்லப்படுவதற்கு முன்னர், இவர்களை 600 மைல்கள் நடக்கச் செய்து நாகசாகி நகருக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் சிலுவையில் அறையப்பட ஒரு குன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, மகிழ்ச்சியோடு நன்றிக் கீதம் இசைத்துக் கொண்டே சென்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. மேலும், கிரேக்க தத்துவமேதை சாக்ரடீஸ், தனக்குக் கொடுக்கப்பட்ட நஞ்சுக்கிண்ணத்தை முகம் சுளிக்காமல் வாங்கிக் குடித்தார் என்பது வரலாறு.
எனவே கொலைக்களத்திலும் மகிழ்ச்சி, தீராத நோயிலும் மகிழ்ச்சி, கடும் பனிப்பொழிவிலும் மகிழ்ச்சி, இப்படி எந்நேரத்திலும் எங்கும் மகிழ்ச்சியாய் இருக்க முடியும். தண்ணீரைத் தேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. ஆக, செயற்கையான எதிலும் மகிழ்ச்சி வந்து விடாது. ஒரு கவிஞர் சொல்வது போல, சொத்திருந்தாலும், சுகம் இருந்தாலும், இவையிரண்டும் இல்லாதிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி.
'மகிழ்ச்சியைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். அது நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. மகிழ்ச்சியாக இருப்பது போன்ற உணர்வே, வாழ்க்கையில் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும். மகிழ்ச்சியாக இருப்பது போன்ற உணர்வினை வளர்த்துக் கொண்டாலே, உண்மையான மகிழ்ச்சி கிடைத்துவிடும். (Bertrand Arthur William Russell இத்தகைய மகிழ்ச்சி, தன்னையும் பிறரையும் மகிழ வைக்கும். வாழ வைக்கும்.








All the contents on this site are copyrighted ©.