2012-02-06 15:29:13

இந்தியத் திருஅவை, சமுதாய நீதியை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கத்தோலிக்கத் துறவியர் உயிரிழக்கின்றனர்


பிப்.06,2012. துயர்துடைக்கும் பிறரன்புப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்தியத் திருஅவை, தற்போது சமுதாய நீதியை வலியுறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், கத்தோலிக்கத் துறவியர் உயிரிழக்கும் நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று இந்திய கத்தோலிக்கத் திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து 8ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கத்தோலிக்கத் துறவியர் அமைப்பின் தலைவர், அருள்சகோதரர் மானி மேக்குன்னெல் தன் உரையில் இவ்வாறு கூறினார்.
வறுமைப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த அருள்சகோதரிகள் ராணி மரியா, வல்சா ஜான் ஆகியோர் அநீதியாகக் கொலையுண்டதைப்பற்றிப் பேசிய அருள்சகோதரர் மேக்குன்னெல், இந்தியாவில் பணி புரியும் இருபால் துறவியரைக் குறித்த சில புள்ளிவிவரங்களையும் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் 1,25,000 துறவியர் பணிபுரிகின்றனர் என்றும், இவர்களில் 27,224 பேர் முழு நேரச் சமுதாயப் பணியிலும், 12,421 பேர் பகுதி நேரப் பணியாளர்களாகவும் உள்ளனர் என்று அண்மைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் பணிபுரியும் துறவியரில் 80 விழுக்காட்டினர் பெண் துறவியர் என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.