2012-02-03 15:53:31

சிறந்ததோர் இந்தியா உருவாக்கப்பட உரையாளர்களின் பரிந்துரைகள்


பிப்.03,2012. பெங்களூரு புனித ஜான் தேசிய நலவாழ்வு நிறுவனத்தில் 30வது பொதுக்கூட்டத்தை நடத்தும், இந்திய ஆயர்களுக்கு உரையாற்றிய புகழ்பெற்ற சமூக ஆர்வலர் பேராசிரியர் T.K.Oomen, இந்தியத் திருஅவை, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் வாழ்வு மேம்படுவதற்காக உழைக்குமாறு பரிந்துரைத்தார்.
சந்தை, குடிமக்கள் சமுதாயம், நாடு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்பு பற்றி விளக்கிய Oomen, ஏழைகள் தங்களது நிலத்தையும், சமத்துவத்துக்கும் மாண்புக்குமான சட்டரீதியான உரிமைகளையும் இழந்து விடாமல் இருப்பதற்குத் திருஅவை, அரசையும் சமுதாயக் குழுக்களையும் முடுக்கி விடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் மதமாற்றம் செய்வதில் புத்தமதம் முதலிடத்தில் இருந்த போதிலும், கிறிஸ்தவமே, மக்களை மதமாற்றும் முத்திரையைப் பெற்றுள்ளது என்றும் கூறிய அவர், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லுவதற்குத் திருஅவை ஏதாவது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, இத்தகைய பன்மைத்தன்மை கொண்ட சமுதாயம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் Oomen கூறினார்.
மேலும், இக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான Naveen Chawla, கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் செய்து வரும் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு திருஅவைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.
அன்னை தெரேசா வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும், அன்னை தெரேசாவோடு 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தொடர்பு வைத்திருந்தவருமான Chawla, அன்னை தெரேசாவின் அன்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்துமாறும் வலியுறுத்தினார்.
இந்தியத் திருஅவையின் 170 ஆயர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் இம்மாதம் 8ம் தேதியன்று முடிவடையும்.







All the contents on this site are copyrighted ©.