2012-02-03 15:54:37

இயேசுவை, “கம்யூனிச புரட்சிவாதி” என்று சித்தரித்திருப்பதற்கு கேரளத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்


பிப்.03,2012. அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ள இந்திய கம்யூனிச கட்சி வரலாறு குறித்த அருங்காட்சியகத்தில் இயேசுவை, “கம்யூனிச புரட்சிவாதி” என்று சித்தரித்திருப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
“Marx மட்டுமே சரி” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில், “மறைசாட்சியம், கிறிஸ்துவிலிருந்து சே” என்ற தலைப்பும் இடம் பெற்றுள்ளது. அடுத்த வாரத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கும் அக்கட்சியின் மாநிலக் கருத்தரங்கின் போது இது திறக்கப்படும்.
இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, கேரள இலத்தீன் ரீதி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் மரிய காலிஸ்ட் சூசைபாக்கியம், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குறை கூறியுள்ளார்.
கம்யூனிசவாதிகள், இயேசுவின் போதனை மீதான தங்கள் புறக்கணிப்பை எப்போதுமே காட்டியுள்ளனர் என்றும், தற்போதைய இந்நடவடிக்கை, திருஅவைத் தலைவர்களைக் கேவலப்படுத்துவதற்காகவே இடம் பெற்றுள்ளது என்றும் பேராயர் சூசைபாக்கியம் மேலும் கூறியுள்ளார்.
“சே(Che)” என்பது அர்ஜென்டின நாட்டின் கம்யூனிச புரட்சிவாதியான எர்னஸ்த்தோ சே குவாராவைக் குறிப்பதாகும்.
கேரளாவின் 3 கோடியே 20 இலட்சம் மக்களில் 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.