2012-02-02 15:28:29

இறைவாக்கினரைப் போல செயலாற்றுவது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணி


பிப்.02,2012. இன்றைய இந்தியாவுக்கு இயேசு வருகை தந்தால், அவர் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னென்ன முயற்சிகள் எடுப்பார் என்பதை கத்தோலிக்கத் திருஅவை சிந்திக்க வேண்டும் என்று இயேசு சபை குரு Rudolf Heredia கூறினார்.
பெங்களூருவில் பிப்ரவரி 1 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றுவரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக் குழு கூட்டத்தில் இவ்வியாழனன்று சிறப்புரையாற்றிய சமூகவியல் சிந்தனையாளரான அருள்தந்தை Heredia, இயேசுவின் காலத்திய வழிமுறைகளுக்கும், இன்றைய இந்தியாவுக்குத் தேவையான வழிமுறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் கண்டறிய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
நீதியான சமுதாயத்தை உருவாக்குவது இன்று இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு முக்கியமான நோக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய அருள்தந்தை Heredia, குடியாட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் மத்தியில், ஓர் இறைவாக்கினரைப் போல செயலாற்றி, உண்மையை எடுத்துரைப்பது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணி என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் அனைத்து மக்களின் முழுமையான வளர்ச்சியில் நாம் அக்கறை கொண்டுள்ளோமா அல்லது, கத்தோலிக்க மக்கள், கிறிஸ்துவ மக்களின் வளர்ச்சியில் மட்டும் நாம் அக்கறை கொண்டுள்ளோமா என்பதை ஆயர்கள் ஆய்வு செய்யவேண்டும் என்ற கேள்வியையும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 170 ஆயர்கள் முன் வைத்தார் இயேசு சபை குரு Heredia.








All the contents on this site are copyrighted ©.