2012-02-02 15:28:10

இறையடி சேர்ந்த கர்தினால் Anthony J.Bevilacquaக்கு திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி


பிப்.02,2012. அமெரிக்காவில் இச்செவ்வாய் இரவு இறையடி சேர்ந்த கர்தினால் Anthony Joseph Bevilacqua அவர்களின் மறைவுக்கு தன் ஆழந்த வருத்தத்தை வெளியிட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று தந்தி அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Charles Chaputக்கு அனுப்பியுள்ள இந்தச் செய்தியில், மறைந்த கர்தினால் Bevilacqua குடியேற்றதாரர் மட்டில் கொண்டிருந்த சிறப்பான அக்கறையைத் திருத்தந்தை நினைவு கூர்ந்தார்.
1923ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த Anthony Bevilacqua, 1949ம் ஆண்டு குருவாகவும், 1980ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். திருஅவைச் சட்டங்களில் பட்டம் பெற்று, அத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த Bevilacqua, 1991ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
1988ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பிலடெல்பியா உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிபுரிந்த கர்தினால் Anthony Bevilacqua, புற்றுநோயால் உடல் நலம் குன்றி, இச்செவ்வாய் இரவு தனது 88வது வயதில் இறையடி சேர்ந்தார்.
கர்தினால் Anthony Bevilacquaன் மறைவை அடுத்து தற்போது, கத்தோலிக்கத் திருஅவையில் உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை 191ஆக குறைந்துள்ளது. இவர்களில் 80க்கும் குறைவான வயதுடைய 107 கர்தினால்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.








All the contents on this site are copyrighted ©.