2012-02-02 15:27:55

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் நல்ல பலனைத் தரவேண்டும் - திருத்தந்தை


பிப்.02,2012. இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்தை மையப்படுத்தி இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் நல்ல பலனைத் தரவேண்டும் என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று பெங்களூருவில் ஆரம்பமான இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்திற்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ள செய்தி இந்தப் பேரவையின் துவக்க அமர்வில் வாசிக்கப்பட்டது.
இப்பொதுக்குழு கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியை இப்புதன் காலை தலைமையேற்று நடத்திய திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio, இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் தீர்க்கமான எண்ணத்துடன் கிறிஸ்துவ சமுதாயம் உழைக்க வேண்டும் என்று கூறினார்.
திருப்பலிக்குப் பின்னர் நடைபெற்ற துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், இந்திய சமுதாயத்தின் மனசாட்சியாக கத்தோலிக்கத் திருஅவை செயல்படுகிறது என்று கூறினார்.
செல்வர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இடைவெளியே இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை என்றும், இந்தியாவின் பெரும்பாலான வளங்கள் செல்வந்தர்களை மட்டும் சேர்வது வருத்தத்திற்குரிய ஒரு நிலை என்றும் கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இத்துவக்க விழாவில் சிறப்புரை யாற்றிய நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், கிறிஸ்துவத் தலைவர்கள் கடவுளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய ஊழியர்களாகச் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இத்துவக்கவிழா அமர்வின்போது, அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள சிரோ மலபார் திருஅவையின் தலைமைப்பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரிக்கு சிறப்பான வாழ்த்துக்களை அனைத்து ஆயர்களும் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.