2012-02-01 14:56:26

வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் புதிய முதுபெரும் தலைவர்


பிப்.01,2012. இத்தாலி நாடும், ஐரோப்பாவும் தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடியை வெறும் பொருளாதார நெருக்கடியாகப் பார்ப்பதைக் காட்டிலும் ஒரு கலாச்சார மற்றும் மனித இன நெருக்கடியாகப் பார்ப்பது முக்கியம் என்று இத்தாலிய ஆயர் ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Francesco Moraglia, வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய ஒரு பேட்டியில், தன்னைத் திருத்தந்தை இப்பொறுப்பில் நிறுவியதைக் கேட்டதும் தனக்குள் உருவான அச்சத்தையும் குறிப்பிட்டார்.
375,000க்கும் அதிகமான கத்தோலிக்கர்களைக் கொண்ட வெனிஸ் உயர்மறை மாவட்டத்தின் பொறுப்பு, திருஅவையில் ஒரு முக்கியப் பொறுப்பு என்று கருதப்படுகிறது.
58 வயது நிரம்பிய ஆயர் Moraglia, இத்தாலியின் ஜெனோவாவில் பிறந்தவர். இவர் 1977ம் ஆண்டு குருவாகவும், 2008ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பத்தாம் பத்திநாதர், 23ம் ஜான், மற்றும் முதலாம் ஜான் பால் என்ற பெயர்களைத் தாங்கி, இருபதாம் நூற்றாண்டில் திருஅவையை வழிநடத்திய மூன்று திருத்தந்தையர் வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும் தலைவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.