2012-02-01 15:25:55

பிப்ரவரி 01, 2012. கவிதைக் கனவுகள்............. முதுமை


முதியோர் இருக்கும் வீடுகளில்
குழந்தைகள் விரைவில் பேசத் துவங்குகிறார்கள்.
அண்மை ஆய்வின் கூற்று.
தாத்தா பாட்டி வண்டி ஓட்டும்போது
குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
இலண்டன் ஆய்வே சான்று.
உலகிலேயே அதிகப்படியான
பாசத்தைக் காணுமிடம் தாத்தா பாட்டி வீடு.
அதிகம் பேர் தந்த பதில்.

கூட்டுக் குடும்ப கலாச்சாரம்
அந்நியர்களுக்கோ ஆச்சரியம்.
திருமணத்தன்றே தனிக்குடித்தனப் பேச்சு,
முதியோர்களின் கனவுத் தகர்ப்பு.
அப்பா அம்மா, தாத்தா பாட்டி
கொள்ளு எள்ளு தாத்தாக்கள் பாட்டிகள்
எத்தனை பேர் சமைத்த வாழ்வு இது!
அவர்கள் மரபணுக்கள் வகுத்த வழி இது!
அவர்களின் பங்களிப்பை நிறைபோட தராசுகள் இல்லை
குறைகாணும் கடின உள்ளங்களும் இல்லை.

தலையில் நரை கண்டு, கருவிழியில் திரை கொண்டு
உடலெங்கும் அனுபவக் கோடு தாங்கி
தேகம் தேய்ந்தும், ஆசைகள் ஓய்ந்தும்
கடந்தவை அசைபோட்டு நாட்களை நகர்த்தி,
தூளியில் துவங்கிய வாழ்வை
தாழியில் வைக்கும் வரை,
வரும் தலைமுறைக்காய் வாழ்பவர்கள் இவர்கள்.

வாழ்வின் வெளிப்புறத் தேவைகளைக் கற்று நிரப்பலாம்
வாழும் முறையை எங்கிருந்து பெற்று நிரப்புவது?
முதுமை எனும் பழுத்த மனது
பயன்பெறுவார் தேடி அலைகின்றது.








All the contents on this site are copyrighted ©.