2012-02-01 15:00:50

காஷ்மீரில் Sharia நீதி மன்றம் விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது - கர்தினால் கிரேசியஸ்


பிப்.01,2012. காஷ்மீரில் இருந்து கிறிஸ்தவ குருக்களும் போதகர்களும் வெளியேற வேண்டும் என்று Sharia நீதி மன்றம் விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
காஷ்மீரில் நிலவும் பதட்ட நிலை குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது, கர்தினால் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
மக்களை வலுக்கட்டாயமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவது கத்தோலிக்கத் திருஅவைக்கு புறம்பான ஒரு செயல் என்று விளக்கிய கர்தினால் கிரேசியஸ், அதே நேரம், மனமுவந்து ஒருவர் மதமாற்றம் அடைவதைத் தடுப்பதும் ஒருவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயல் என்று சுட்டிக் காட்டினார்.
Sharia நீதி மன்றம் எடுத்துள்ள இந்த முடிவு பிற மதங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றதல்ல என்றும், இது போன்ற அமைப்புக்களை வளரவிடுவது குடியரசு நாட்டின் அதிகாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.
கத்தோலிக்கத் திருஅவை அல்லாமல், பிற கிறிஸ்தவ சபைகளும் காஷ்மீரில் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கத்தோலிக்கக ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப், பிற சபைகள் மேற்கொள்ளும் மதமாற்ற முயற்சிகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை பொறுப்பேற்காது என்பதையும் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.