2012-02-01 14:59:48

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்தைப் பற்றிய விவரங்கள்


பிப்.01,2012. இந்திய சமுதாயத்தை முன்னேற்றும் முயற்சிகளில் கத்தோலிக்கத் திரு அவை பெருமளவில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்தியாவில் தற்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையையும், மருத்துவ முறையையும் நிறுவிய பெருமை திருஅவையையேச் சாரும் எனவும் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
'சிறந்ததொரு இந்தியாவை உருவாக்க திரு அவையின் பங்கு' என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று பெங்களூருவில் ஆரம்பமாகியுள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்தைப் பற்றி இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் கிரேசியஸ், இப்பேரவையின் விவரங்களை வெளியிட்டார்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், Misereor என்ற அகில உலக பிறரன்பு அமைப்பின் இயக்குனர் முனைவர் Josef Sayer, மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் Navin Chawla, ஆகியோர் உட்பட, பல அறிஞர்கள் வழங்கும் முக்கிய உரைகள் இடம்பெறும் என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
பெங்களூருவில் உள்ள புனித ஜான் மருத்துவ ஆய்வு தேசிய நிறுவனத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், கத்தோலிக்கத் திருஅவை இன்னும் என்னென்ன வழிகளில் இந்திய சமுதாயத்தை உயர்த்தமுடியும் என்ற விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.32 விழுக்காடே ஆயினும், இந்திய நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு தலத்திருஅவையின் பங்களிப்பு எவ்விதத்திலும் குறைவுபடாது என்று ஆயர் பேரவையின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.
நிருபர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெங்களூரு பேராயர் Bernard Moras, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலர் பேராயர் Albert D’Souza உட்பட பலரும் கலந்து கொண்டு பல தகவல்களை வழங்கினர்.







All the contents on this site are copyrighted ©.