2012-01-30 14:46:59

வாரம் ஓர் அலசல் – அவர்களும் மனிதர்கள்


சன.30,2012. கிரேக்க தத்துவ ஞானி டயோனிசியுஸ் (Dionysius), அந்நாட்டு அரசரின் தயவை நாடாது எளிமையாக வாழ்ந்து வந்தார். சிறு ரொட்டித் துண்டும் பருப்புமே அவரது அன்றாட உணவு. அந்நாட்டில் அரிஸ்டிப்பஸ் (Aristippus) என்ற மற்றொரு தத்துவ ஞானியும் இருந்தார். இவர் அரசரின் புகழ்பாடி ஊழைக் கும்பிடு போடுபவர். ஆனால் அறுசுவை உணவை உண்ணும் செல்வந்தர். ஒருநாள் அரிஸ்டிப்பஸ், டயோனிசியுஸ் வீட்டுக்கு விருந்துக்குப் போனார். அங்கு அவருக்கு ரொட்டித் துண்டும் பருப்பும் பரிமாறப்பட்டன. அவ்வுணவைப் பார்த்த அரிஸ்டிப்பஸ், டயோனிசியுஸிடம், “நீர், மன்னரை அனுசரித்துப் போகக் கற்றுக் கொள். அப்போது இப்படிப் பருப்பைச் சாப்பிட்டு வாழ வேண்டிய அவசியம் இருக்காது” என்றார். சிலநாள் கழித்து டயோனிசியுஸ், அரிஸ்டிப்பஸ் வீட்டுக்குச் சென்றார். அவரோ, மிகவும் சோகத்திலிருந்தார். காரணம் கேட்டார் டயோனிசியுஸ். அதற்கு அரிஸ்டிப்பஸ், அரசர் மரியாதை இல்லாமல் தன்னிடம் நடந்து கொண்டதாகக் கூறினார். அப்போது டயோனிசியுஸ் அவரிடம், “பருப்பைத் தின்று வாழக் கற்றுக் கொள். அப்போது அரசரிடம் மானம் கெட்டு, மரியாதை இழந்து, வயிறு வளர்க்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று சொன்னார். அந்த ஞானி மேலும் சொன்னார் ... “மானமற்ற அறுசுவை உணவைவிட மானமுள்ள பருப்பும் ரொட்டியுமே மேல்” என்று.
அன்பு நெஞ்சங்களே, தன்மானத்தையும் சுயமரியாதையையும் சுயமாண்பையும் இழப்பதற்கு யாருமே விரும்புவதில்லை. ஒரு வயதுக் குழந்தைகூட, தன்னைப் பற்றிப் பிறர் குறை பேசுவதைப் புரிந்து கொண்டு அதற்குத் தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. அப்படியிருக்க, நோயினாலும் வறுமையினாலும் முகமிழந்து, முகவரியிழந்து, தோற்றமிழந்து ஒதுக்கப்பட்டு வாழும் மனிதர்கள் மட்டும் மாண்புடன் வாழ விரும்ப மாட்டார்களா? அவர்களும் மனிதர்கள் தானே! உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை, அத்தியாவசிய உரிமைகளை அனுபவிக்க அவர்களுக்கும் உரிமைகள் உண்டல்லவா!
49 வயது நிரம்பிய திருவாளர் எஸ் ஆறுமுகம் என்ற லியோ ஆனந்த், முன்னாள் தொழுநோயாளி. கரூர் மாவட்டம் பாப்பன்பட்டியைச் சேர்ந்த லியோ ஆனந்த், ஐந்தாவது படித்த போது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர். திருச்சி, மரியின் ஊழியர் சபை சகோதரிகள் நடத்தும் திருச்சி பாத்திமா நகர் தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது முழுநலத்துடன் நல்லதொரு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அவரது அனுபவங்களை முதலில் கேட்போம்.
RealAudioMP3 அன்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் சனவரி இறுதி ஞாயிறன்று உலகத் தொழுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கவும், இந்நோயாளிகள் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, உலகில் தொழுநோயை ஒழிப்பதற்கானத் தீவிர முயற்சிகளில் இறங்கும் காலமாகக் குறித்து, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. தொழுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இந்நோயாளிகளுக்குச் சமுதாயத்தில் சமத்துவமும், சமூகநீதியும், மனித உரிமைகளும் கிடைப்பதற்கும் உலக நலவாழ்வு நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்நவீன உலகின் மருத்துவத்துறை எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறது. ஆனால், Hansen நோய் என்றழைக்கப்படும் தொழுநோயை அத்துறையால் இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இந்நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தாலும், 2010 மற்றும் 2011ம் ஆண்டில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேர் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தனர் என்று WHO நிறுவனம் கூறியது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
சனவரி 29, இஞ்ஞாயிறன்று 59வது உலகத் தொழுநோய்த் தினம் கடைபிடிக்கப்பட்டது. இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், இத்தொழுநோய்த் தினம் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இத்தொழுநோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு உதவி செய்பவர்களையும், இந்நோய்த் தாக்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும், இத்தொழுநோயாளிகள் ஓரங்கட்டப்படுதல் மற்றும் இவர்களின் வறுமையை ஒழிப்பதற்கும் பல வழிகளில் தங்களை அர்ப்பணித்து வருபவர்களையும் தான் ஊக்கப்படுத்துவதாகவும்” தெரிவித்தார்.
RealAudioMP3 இத்தினத்திற்கென செய்தி வெளியிட்ட வத்திக்கான் நலவாழ்வுத்துறைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோஸ்கி, “பன்னாட்டுச் சமுதாயம், தொழுநோயாளிகளைக் கைவிட்டுவிடக் கூடாது” எனக் கேட்டுக் கொண்டார். “அனைத்துலக தொழுநோயாளிகள் தங்களது மனித மாண்பையும் ஆன்மீகத்தையும் அவற்றின் செறிவோடு வெளிப்படுத்த முடியும் மற்றும் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம், இந்நோயிலிருந்து குணமாணவர்கள், அந்நோயால் துன்புறுவோருக்குத் தங்களது அனுபவங்களினால் ஆதரவு கொடுத்து, தாங்கள் குணம் பெற்றதற்கான நன்றியை வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுள்ளார். ILEP என்ற அனைத்துலக தொழுநோய் ஒழிப்புக் கழகத் தலைவர் Renè Staheli யும், “இந்நோயாளிகள் அனைத்து அடிப்படைத் தேவைகளுடன் மனித மாண்புடனும் வாழ உரிமையைக் கொண்டுள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.
அன்பர்களே, தொழுநோய் என்பது முற்றிலும் குணமாக்கக்கூடிய நோயாகும். உணர்ச்சியற்ற வட்ட வடிவில் காணப்படும் தேமல், கை கால்களில் மரத்தல் ஏற்படுதல், பல சிவப்புநிறப் புள்ளிகள் அல்லது முகம், புட்டம், உடலின் மற்ற பின்பகுதிகளில் காணப்படும் உணர்வற்ற அல்லது உணர்வுடனோ உள்ள வட்ட வட்டமான திட்டுகள் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். மல்டி ட்ரக் தெரபி எனும் பலமருந்து சிகிச்சையினைத் தவறாமல் எடுத்துக்கொண்டால் இந்நோயினை எந்த நிலையிலும் குணப்படுத்த முடியும். இந்தப் பலமருந்து சிகிச்சை, இந்தியாவில் எல்லா மாவட்டங்களிலேயும் உள்ள தொழுநோய் மையங்கள், பெரும்பாலான மருத்துவமனைகள், சிறுவர் நலவாழ்வு மையங்கள் மற்றும் பொது நலவாழ்வு மையங்கள் போன்றவைகளில் இலவசமாகவே கிடைக்கிறது என்று சொல்லப்படுகின்றது. இந்தச் சிகிச்சை முறையினை மருத்துவர் கூறும் நாள் வரை அவசியம் பின்பற்ற வேண்டும்.
தொழுநோயாளிகள், பார்ப்பதற்கு விகாரமாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் சாதாரண மனிதரைப் போன்ற உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் என அனைத்தும் இருக்கின்றன. இவர்களும் இறைவனின் பிள்ளைகள். இறைவன் நம்மை அன்பு செய்வது போல் இவர்களையும், ஏன், ஒருபடி அதிகமாகவே அன்பு செய்கிறார். இவர்களும் நம் சகோதர, சகோதரிகள். கோவில் வாசல்களில், சாலையோரங்களில், பேருந்து நிறுத்தங்களில், எனச் சில இடங்களில் இவர்களை நாம் பார்க்கிறோம். அச்சமயங்களில் நமது அணுகுமுறை எப்படி இருக்கிறது?
அன்பு இல்லா வெறுமை உள்ளம், அனைத்துத் தீமைகளின் தொடக்க இல்லம் என்பார்கள். எனவே நமக்கு உள்ளே ஒரு அகப்பயணம் சென்று நம்மில் உறங்கிக் கிடக்கும் மனிதத்தைத் தூசி தட்டி, அன்புணர்வை அகலமாக்கி, அன்புறவு வாழ்க்கையில் சிறகு விரிப்போம். அவர்களும் நாமும் சகோதர சகோதரிகள் என்ற உறவை உலகுக்கு உணர்த்துவோம்.








All the contents on this site are copyrighted ©.