2012-01-30 14:42:57

புனித பூமியில், அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


சன.30,2012. புனித பூமியில், அமைதி எனும் கொடைக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித பூமியில் அமைதி ஏற்படுவதற்காகச் செபிக்கும் அனைத்துலக நாள் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் திருத்தந்தை.
இவ்வுலக நாளையொட்டி, உரோமை நகருக்கும் அகில உலகத்திற்கும் அமைதியைக் குறிக்கும் அடையாளமாக, வத்திக்கான் சன்னலிலிருந்து இரண்டு மாடப்புறாக்களையும் திருத்தந்தை பறக்கவிட்டார். ஆனால் அவை திரும்பி வந்ததால், அவை பாப்பிறையின் இல்லத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் திருத்தந்தை கூறினார். உரோம் கத்தோலிக்கக் கழகத்தின் இரண்டு இளையோர் இப்புறாக்களைத் திருத்தந்தையிடம் இத்தினத்தன்று கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும், இஞ்ஞாயிறு "உலகத் தொழுநோய் தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், Raoul Follereau நண்பர்கள் என்ற இத்தாலிய தொழுநோய் ஒழிப்பு அமைப்பினரை வாழ்த்தினார். அத்துடன், இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு உதவி செய்பவர்களைத் தான் ஊக்கப்படுத்துவதாகக் கூறினார்.
இந்நோய்த் தாக்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும், இத்தொழுநோயாளிகள் ஓரங்கட்டப்படுவதல் மற்றும் இவர்களின் வறுமையை ஒழிப்பதற்கும் பல வழிகளில் தங்களை அர்ப்பணித்து வருபவர்களைத் தான் உற்சாகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும், நம் ஆண்டவர் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவான வருகிற பிப்ரவரி 2, வியாழனன்று உலகத் துறவியர் தினம் சிறப்பிக்கப்படுகிறது, நமது மனித சமுதாயத்தை விடுவித்துக் குணப்படுத்தும் இறைஇரக்கம், அன்பின் வல்லமையால் நம்மை அருளாலும் நன்மைத்தனத்தாலும் நிரப்புவதற்கு நம் இதயங்களை இட்டுச் செல்ல அன்னைமரியாவிடம் செபிப்போம் என்று ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.