2012-01-30 14:41:30

இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை


சன.30,2012. இறைவனின் அதிகாரம், வல்லமையையும் அதிகாரத்தையும் அடக்கி ஆள்வதையும் கொண்டதல்ல, மாறாக அது சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு போதித்த போது, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் குணமாக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தையின் வல்லமை, தீயவைகளை வெளியேற்றுகின்றது என்று கூறினார்.
இம்மூவேளை செப உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 25 ஆயிரம் திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, "கடவுளின் அதிகாரம்" பற்றிச் சிந்திக்கவும் அழைப்பு விடுத்தார்.
இறை அதிகாரம், இவ்வுலக அதிகார இயல்பைக் கொண்டதல்ல, ஆனால், அது, இவ்வுலகைப் படைத்த இறைவனின் அன்பின் அதிகாரமாகும், தனது ஒரே மகனை மனித உரு எடுக்கச் செய்ததில், மனிதனைப் போல் தம்மைத் தாழ்த்தியதில், அவ்வதிகாரம் பாவத்தால் மாசடைந்த உலகத்தைக் குணப்படுத்தியது என்றும் திருத்தந்தை கூறினார்.
"இயேசுவின் வாழ்வு முழுவதும், தாழ்மையில் வல்லமையின் மாற்றமாகும், தன்னையே அவர் ஊழியர் என்ற நிலைக்குத் தாழ்த்தினார் என்று Romano Guardini என்பவர் எழுதியுள்ளார் என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
மனிதனுக்கு அதிகாரம் என்பது, உடைமைகளைக் கொண்டிருத்தல், ஆளுமை, அடக்கி ஆள்தல், வெற்றி ஆகியவைகளைக் கொண்டது, ஆனால், இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.