2012-01-28 15:53:12

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு


சன.28,2012. இலங்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருக்கலைப்புச் சட்டத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
“நியாயப்படுத்தப்படாத கர்ப்பங்களுக்கு” மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்கப் பரிந்துரை செய்துள்ள இலங்கை அரசின் மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை ஆயர்கள், ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் பாதுகாக்கப்படவில்லையெனில், மனித சமுதாயம் பாதுகாப்பாக இருக்காது என்று கூறுகிறது.
கருக்கலைப்பைச் சட்டமாக்குவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தாங்கள் புறக்கணிப்பதாக ஆயர்களின் அறிக்கை மேலும் கூறுகிறது.
இலங்கையில் கருக்கலைப்பு, சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், அண்மை ஆண்டுகளில் அந்நாட்டில் கருக்கலைப்பு அதிகரித்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குடும்ப நலஅமைப்பு தெரிவித்தது.
2008ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 700 வீதம் இடம் பெற்ற கருக்கலைப்புகள், 2011ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரமாக உயர்ந்ததாகவும், தலைநகர் கொழும்புவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 500 வீதம் இடம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.