2012-01-27 15:37:26

திருப்பீட உயர் அதிகாரி : தொழுநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை, நன்மனம் கொண்ட அனைத்து மனிதரின் சேவை


சன.27,2012. தொழுநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை, நன்மனம் கொண்ட அனைத்து மனிதரின் சேவையாக இருக்கின்றது என்று திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் கூறினார்.
சனவரி 29ம் தேதியான இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் 59வது அனைத்துலக தொழுநோய்த் தினத்திற்காக செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, தொழுநோயாளிகளும், அந்நோயிலிருந்து குணமானவர்களும் தங்களது வளமையான ஆன்மீக மற்றும் மனித மாண்பை வெளிப்படுத்த முடியும் மற்றும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இவர்கள், பிறரோடு, குறிப்பாக, இந்நோயால் தாக்கப்பட்டுள்ளவர்களுடன் முழுமையான ஒருமைப்பாட்டை காட்ட வேண்டும் எனவும் அச்செய்தி கேட்டுள்ளது.
அதேசமயம், ஹான்சென் நோய் என அழைக்கப்படும் இத்தொழுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தொடர்ந்து செயல்படுமாறும் பேராயரின் செய்தி வலியுறுத்துகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், மைக்ரோபாக்டீரியம் லெப்ரே எனப்படும் தொழுநோய்க் கிருமி, உலகில் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை, புதிதாக இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், உலக நலாவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, இன்றும், உலகில் சுமார் இரண்டு இலட்சம் பேர் தொழுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் பேராயர் Zimowski குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவால் குணமாக்கப்பட்ட பத்துத் தொழுநோயாளிகளில் ஒருவர், திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி தெரிவித்த நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ள இச்செய்தி, இயேசு அவரிடம் கூறிய வார்த்தைகள், அவரின் அன்பு, குணமான அம்மனிதரை ஒருபோதும் கைவிடாது என்பதைக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம், தொழுநோயிலிருந்து குணமானவர்கள், தாங்கள் எதிர்கொண்ட துன்பங்களின் அனுபவங்களைக் கொண்டு, முழு மனித மாண்புடன் பிறருக்கு உதவ வேண்டும் என்றும் திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவரின் செய்தி வலியுறுத்துகிறது.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் சனவரி, இறுதி ஞாயிறன்று நூற்றுக்கு அதிகமான நாடுகளில், இவ்வுலக தொழுநோய்த் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1,20,000க்கு மேற்பட்டோர் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.