2012-01-27 15:44:34

சன 27, 2012. கவிதைக் கனவுகள்.......... தாயின் நினைவே வாழ்வு


தாயே!
உயிரை அடைகாத்தாய்
உதிர அமுதளித்தாய்,
புதிய உதயமளித்தாய்
அன்பிலே வளர்த்தாய்
ஆதரவாய் அரவணைத்தாய்.
கனிவாய் கற்பித்தாய்
கறை காண திருத்தம் தந்தாய்
உறவுக்கு உரமளித்தாய்
ஏக்கத்திற்கு உயிரளித்தாய்
துயரேற்று துன்பமழித்தாய்
சத்தளித்து சருவுருவெடுத்தாய்
இயற்கை அன்னை, தாய் நாடு
எனும் நாமம் தந்தாய்.
எல்லாம் தந்தாய்.
எனையே தந்தாய்.
எனக்கும் தந்தாய் என் தந்தாய்.

அன்னை நீ தந்த பாசமே என் சுவாசமானது
அன்பின் அட்சய பாத்திரமானது

தாயே! நீ தவமா, தவம் தந்த வரமா?
அன்பா? அறமா?
பண்பா? பாசமா?
புதிரா? அற்புதமா?
சாதனையா? சகாப்தமா?
ஒளியா? ஓவியமா?
எதுவாயினும் என் தேவதையே!
இம்மண் வாழ நீ தேவையே!
அன்னையே! அன்பின் அகராதியே!
முந்நூறு நாள் சுமந்த மூன்றெழுத்து மும்மறையே!
என் மனதுக்குள் பொத்தி வைத்துள்ளேன்
உன் நினைவுகளை.
என் வீடு என்றும் நிறைந்தே உள்ளது
உன் நினைவுகளால்!

நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
புனிதங்களைத் தோண்டிப் பார்க்கத் துணிவில்லை.
அன்றையத் தாலாட்டே இன்றும் தூக்கம் தருகிறது.
அவரவர் அன்னையின் நினைவுகள் தாலாட்டட்டும்.
கனவுகளைக் கலைத்து விடாதீர்கள்.








All the contents on this site are copyrighted ©.