2012-01-26 15:51:28

மூன்று ஐ.நா.ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கு திருப்பீடம் ஒப்புதல்


சன.26,2012. போதைப்பொருள் மற்றும் மயக்க மருந்துகள், சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதற்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதாக இவ்வியாழனன்று அறிவித்துள்ளது திருப்பீடம்.
1988ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வியன்னாவில் நிறைவேற்றப்பட்ட இவ்வுலக ஒப்பந்தத்தில், அதே நாளில் திருப்பீடம் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அமல்படுத்துவதன் மூலம், போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், சட்டத்துக்குப் புறம்பே இடம் பெறும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மயக்க மருந்துகள் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் எடுக்கப்படும் உலக அளவிலான முயற்சிகளுக்குத் திருப்பீடம் தனது அறநெறி ஆதரவைக் கொடுக்கத் தீர்மானித்துள்ளது.
இவ்வொப்பந்தத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கையெழுத்திட்டுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடைசெய்வதற்கான அனைத்துலக ஒப்பந்தத்தையும், நாடுவிட்டு நாடு இடம் பெறும் திட்டமிட்டக் குற்றத்திற்கெதிரான ஐ.நா. ஒப்பந்தத்தையும் திருப்பீடம் ஏற்பது குறித்த ஆவணங்களிலும் கர்தினால் பெர்த்தோனே கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் தடைசெய்வதிலும், இத்தகையக் குற்றங்களுக்குப் பலியாகுவோரைப் பாதுகாப்பதிலும் உலக அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் தனது நன்னெறி சார்ந்த ஆதரவை அளிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பீடம், தனது இயல்பு மற்றும் தனது மறைப்பணித் தன்மையோடு ஒத்திணங்கும் விதத்தில், மக்களிடையே சகோதரத்துவம், நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.