2012-01-25 16:25:20

நடைபாதைகளில் ஏழைகள் தூக்கம் : இந்திய உச்சநீதிமன்றம் கவலை


சன.25,2012. "இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்த வெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேரத் தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இந்தக் கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்குத் தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.