2012-01-25 15:45:40

கவிதைக் கனவுகள்............. தந்தை என்ற மந்திரச்சொல்


தாய் சொல்லி அறிந்தாலும்
அவர் சொல் மிக்க மந்திரமில்லை.
தாயெனும் கோவிலே சிறந்ததென்றால்,
தந்தை சொல்லே மந்திரமென்றால்,
இறைக்கும் மறைக்கும் இடையே
இணைப்பல்லவா தந்தை!
யானையேற்றம், குதிரை சவாரி,
கள்ளன் போலீஸ் கைதாட்டம்,
மறைந்து பயமூட்டிய குதூகலிப்பு.
எண்ணங்களே சிலிர்க்கின்றன!
ஒரு தந்தைக்குள் இப்படியொரு குழந்தை மனமா?
இன்றும் எண்ணி வியக்கிறேன்.
உயிரைக் கொடுத்தும் காக்கும் தெய்வம்
உணர்வுகளைப் பகிரும் சகோதரன்,
அரவணைக்கும் நண்பன்.
ஓர் உடலுக்குள் இத்தனை உயிர் பந்தங்களா?
தந்தையே,
உன் விரல் பற்றி நடந்ததில் வீரம் பிறந்தது,
தோள் பற்றித் தூங்கியதில் துயரம் களைந்தது.
பாசம் தாயென்றால் பக்குவம் நீயல்லவா?
அன்பு அன்னையென்றால் அறிவு நீயல்லவா?
பத்து மாதப் பாரம் தாய் சுமக்க,
பத்தரை மாற்றுத் தங்கமாய் நீ மாற்றி,
பத்து மாதம் சுமக்காமலேயே
தாயுமானவன் நீ.
உனக்கென தன்னிகர்தான் உண்டோ?
எதற்கும் ஓர் எல்லையுண்டு.
உன் அன்பிற்கு அதுவுமில்லை.
பள்ளியில் கற்ற பாடத்தை விட
உன் மடியுறங்கிப் பெற்ற அனுபவம் ஆயிரம் அல்லவா?
வாழ்க்கை வழி பாடமான உம் முன் - நான்
என்றும் கடனாளிதான்.
மயில் என்றும் குயில் என்றும் எனை வளர்த்தாய்.
வான்கோழியாய், காகமாய் - நான்
அடையாளம் காணப்படுவது
யார் குற்றம்?








All the contents on this site are copyrighted ©.