2012-01-24 15:35:13

விவிலியத் தேடல் – திருப்பாடல் 101, பாகம் 4


RealAudioMP3 திருப்பாடல் 101 பாகம் 4
மாற்றம் என்பது மாறாதது என்று சொல்வார்கள். அன்பார்ந்தவர்களே! தன் வாழ்வில் மாற்றம் வேண்டும் என நினைத்து, தன் கடந்தகால வாழ்வைச் சிந்தித்துப் பார்த்து, தேவையில்லாதவற்றைக் களைந்து, தேவையானதெனக் கருதுபவைகளைப் பின்பற்ற வேண்டுமென தாவீது மன்னன் முடிவு செய்தார் என்று திருப்பாடல் 101 ன் வழியாகக் கடந்த 3 வாரங்களாகச் சிந்தித்து வருகிறோம். இதுவரை இத்திருப்பாடலின் முதல் 4 நான்கு சொற்றொடர்களைச் சிந்தித்திருக்கிறோம். இன்று 5வது சொற்றொடரின் முதல் பகுதியையும், அடுத்த வாரம் அதன் இரண்டாம் பகுதியையும் சிந்திப்போம்.
இதோ இத்திருப்பாடலின் முதற்பகுதி
“தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்”.
தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன் என தாவீது மன்னன் சொல்வதற்கான காரணம் என்ன?
தாவீது மன்னனின் அரசிலே பதவியைப் பெறுவதற்காகப் பலர் முயற்சி செய்தனர். ஒருவர் மற்றொருவரைக் குறைசொல்லி, பழித்துரைத்து, பிறரைப் பின் தள்ளி எப்படியாவது பதவியைப் பெற்றுவிட வேண்டும் என முயற்சி செய்தனர். தன் திறமைகளை முன்னிறுத்தி முயற்சி செய்யாமல், பிறரைப் பழித்துரைக்கும் குறுக்குவழியைப் பின்பற்றியதால், தாவீது மன்னன் அவர்களை வெறுத்தார். அவர்களைப் போன்றவர்களை ஒழிப்பேன் எனவும் சூளுரைத்தார்.
அன்பார்ந்தவர்களே! பிறரைக் குறை சொல்வது ஏன்?
தங்களுடைய திறமையின்மை மற்றும் நேர்மையில்லாத் தன்மையை மறைக்கவும், தங்களிடம் இருக்கும் குறைகளைப் பிறர் அறியாமல் இருக்கவும், தங்கள் குறைகளில் பிறர் கவனம் செலுத்தாமல் இருக்கவும், தங்களிடமிருந்து பிறரது கவனத்தைத் திசைதிருப்பவும், அதன் வழியாகத் தங்களை, தங்கள் கௌரவத்தை, தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் பிறரைக் குறைசொல்லுகின்றனர். தங்கள் பதவி போய்விட்டால் செல்வம், அதிகாரம் பறிக்கப்படும். அதன்பிறகு யாருமே மதிக்கமாட்டார்கள் என்ற பயம் வந்து விடுகிறது. எனவே பிறரைப் பழித்துரைக்கிறார்கள்.
தாங்கள் செய்த தவறைப் பிறர் அறிந்து கொண்ட பிறகு, அதைப்பற்றி பேசி விமர்சித்துவிடக்கூடாது எனச் சிந்தித்து, தாங்கள் மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ள எல்லாருமே இதே போன்ற தவறுகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. எனவே தாங்கள் மட்டும் குற்றவாளிகளல்ல. எல்லாருமே குற்றவாளிகள்தான். எல்லாருமே இது போன்ற குற்றங்களைச் செய்வதால் இவற்றைக் குற்றங்களாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், இவை குற்றங்களேயல்ல எனச் சொல்லி, தாங்கள் செய்த தவறுகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். இதற்காகப் பிறரை வீணாகப் பழித்துரைக்கிறார்கள்.
தத்துவமேதை Arthur Schopenhauer, ‘The Art of being Right’ என்ற நூலில், ஒரு விவாதத்தில் வெற்றிபெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும் எனச் சொல்கின்றார். உருவகங்களைப் பயன்படுத்துவது, பார்வையாளர்களைச் சம்மதிக்க வைப்பது, எதிராளியைத் திசை திருப்புவது, வெற்றி பெறுவோம் என்ற நேர்மறையானச் சிந்தனைக் கொண்டிருப்பது, ஒரே பொருளுடைய பல வார்த்தைகளைப் பயன்படுத்துவது என 37 வழிகளைச் சொல்லிக் கொண்டே போகிறார். ஒரு வேளை, இந்த 37 வழிகளையும் கடைப்பிடித்த பிறகும், தோல்வியடையும் நிலைவருமானால், தனக்கு எதிராக விவாதம் செய்பவரைப் பற்றி தரக்குறைவாகப் பேசி அவரை நிலைகுலையச் செய்து வெற்றி பெறலாம் என 38வது வழிமுறையையும் குறிப்பிடுகின்றார். நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்க்க வேண்டும். முடியாத சூழலில் வெற்றிவாய்ப்பு தவறிவிடும் என்ற நிலையில் பிறரை தரக்குறைவாகப் பேசி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கேவலமான வழிமுறையை சமுதாயத்தின் உயர்மட்டத்திலிருப்பவர்களிலிருந்து கடை மட்டத்திலிருப்பவர்கள் வரை கடைபிடிக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஒருவர் மற்றவரைப் பற்றி நல்ல செய்திகளைச் சொல்லுகிறாரெனில் அதைப் பிறர் முன்னிலையில் தைரியமாகச் சொல்லலாம். அதை விடுத்து மறைவாக, பிறரைப் பற்றி ஒருவர் பேசுகிறாரெனில் கண்டிப்பாக அது பிறரைப் பற்றிய அவதூறாகவும், பழிப்புரையாகவும் தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு பழித்துரைப்பதை, யூத வழக்கிலே ‘Triple Tongue’ அதாவது 'மூன்று நாக்கு' என்று சொல்வார்கள். இவ்வாறு பழித்துரைப்பது ஓரிருவரை மட்டுமல்ல மாறாக மூன்று நபர்களைப் பாதிக்கிறது.
முதலாவதாக அயலாரை மறைவாகப் பழித்துரைப்பவர்
இரண்டாவதாக அவ்வாறு சொல்லப்படும் பழிப்புரையை தன் செவிகளின் வழியாக உள்வாங்குபவர்
இறுதியாக யாரைப் பற்றி பழிப்புரைச் சொல்லப்படுகிறதோ அந்த நபர். இவ்வாறு மூன்று நபர்களுக்குமே தீமையாக அமைகிறது. எனவே யூதர்களிடையே மூன்று நாக்கு என்ற சொல்வழக்குப் பயன்படுத்தப்பட்டது.
இதே கருத்தை தூய எரோணிமுசுவும் வழிமொழிகின்றார். பழித்துரைப்பவர், பழித்துரைக்கப்படுபவர் பழிப்புரையைக் கேட்பவர் ஆகிய மூவரின் நற்பெயரும் கெட்டுப் போவதே பழித்துரைப்பதன் விளைவு எனச் சொல்கிறார்.
மறைவாகப் பழித்துரைப்பது என்பது இருளில் செல்லும் தன் அயலாரைக் கத்தியால் குத்தும் மிகப்பெரிய கொலைப்பாதகச் செயல் போன்றது. ஒருவருக்குத் தெரியாமல் மறைந்திருந்து தாக்குவதும், பின்னிருந்து தாக்குவதும் மறுக்கமுடியாத குற்றமாகும்.
அன்பார்ந்தவர்களே! தனக்கு அடுத்திருப்பவரை மறைவாகப் பழித்துரைப்பது இன்று நேற்று பிறந்ததல்ல. மாறாக மனித இனம் உருவான நாளிலிருந்தே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்தவரை மறைவாகப் பழித்துரைக்காத மனிதர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மாற்ற முடியாத ஒன்றை மாற்றுவதற்கு முயற்சி எடுப்பது வீண் எனக் கருதத் தேவையில்லை. உலகம் தோன்றியதிலிருந்தே எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆசை இருந்திருக்கிறது. ஆசையில்லாத மனிதர்கள் இல்லை. எனவே ஆசைகள் வருவது தவறில்லை என கௌதம புத்தர் நினைத்திருந்தால் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற வாழ்வின் மிகப்பெரிய தத்துவம் கிடைத்திருக்காது.
தாவீது மன்னன் தான் வாழ்ந்த காலத்தில் இவ்வாறு பிறரை மறைவாகப் பழித்துரைப்பது நல்லதொரு ஆட்சிக்கு உதவாது என முடிவு செய்தார். எனவே பிறரை மறைவாகப் பழிப்பவரை வேரோடு அழிப்பதாகச் சூளுரைத்தார். எனவே நமது வாழ்க்கை சிறப்பாக அமைய நல்ல படிப்பு, கை நிறைய ஊதியம் இருந்தால் மட்டும் போதாது, மாறாக நல்ல பண்புகள் இருக்க வேண்டும்.
மனிதர்கள் குறையுள்ளவர்கள். குறையில்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஒருவரிடம் குறைகள் இருந்தால் உண்மையாகவே அவரின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர், அதை அவர் தனிமையில் இருக்கும் போது அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதைத்தான் இயேசு இவ்வாறு சொல்கிறார். மத்தேயு 18:15
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
இப்படிச் சொல்லும் போது கண்டிப்பாக எப்படிப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
பிறரைப் பற்றி குறை சொல்வதற்கு முன்பு, அதே குறை நம்மிடம் இருக்கிறதா எனச் சிந்திக்க வேண்டும். நம்மிடமே அதை ஒத்த குறைகள் இருக்கும் போது பிறரைக் குறை கூறுவதும், பழித்துரைப்பதும் சரியானதல்ல. இதைத்தான் இயேசு இவ்வாறு சொல்கின்றார். மத்தேயு 7: 3-5
உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?
அல்லது அவரிடம், 'உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
‘நிறை குடம் தளும்பாது’ என்று சொல்வார்கள். தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் குற்றம் செய்யாத நல்ல மனிதர்கள் பிறரைப் பற்றி அபாண்டமாக பேசவும், பழித்துரைக்கவும் மாட்டார்கள்
அடுத்ததாக, அடுத்தவரைப் பற்றி எளிதாகப் பழித்துரைப்பவர்கள் தங்களைப் பற்றி யாராவது பிறரிடம் பழித்துரைப்பதைக் கேட்டால் எப்படி இருக்கும் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பழித்துரைக்கப்படுபவரின் இடத்திலிருந்து சிந்திக்கும் போதுதான் எவ்வளவு மனவருத்தமும் வலியும் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இறுதியாக, செய்த தவறை நினைத்து மனம் வருந்த வேண்டும். இனி அவற்றை திரும்பச் செய்யாமல் இருக்க மனஉறுதி எடுக்க வேண்டும். அதே சமயத்தில் செய்த தவறுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய வேண்டும். 1000 ரூபாயை திருடிவிட்டு, மூன்று அருள் நிறை மரியே செபங்களைச் சொல்லுவது எப்படி பரிகாரம் ஆகும்? எடுத்த ரூபாயை முடிந்தவரை இழந்தவரிடமே திரும்பச் சேர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் 1000 ரூபாயை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். அது தான் செய்த தவறுக்குச் சரியான பரிகாரமாக இருக்கும்.
அதே போல அலுவலகத்தில் உடன் பணியாற்றும் ஒருவரைப் பற்றி அலுவலக நண்பர்கள் நால்வரிடம் பழித்துரைத்து விட்டால் அதற்குப் பரிகாரமாக பழித்துரைக்கப்பட்டவரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து அதே அலுவலக நண்பர்கள் எட்டு பேரிடமாவது அவரின் நற்குணங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். பழிப்புரையைத் திரும்ப பெற முடியாதென்றாலும், அவரின் நல்ல குணங்களை எடுத்துரைப்பது மிகச்சிறந்த பரிகாரமாக இருக்கும்.







All the contents on this site are copyrighted ©.