2012-01-24 15:14:15

திருத்தந்தை : “அமைதியும் வார்த்தையும் : நற்செய்தி அறிவிப்பின் பாதை”


சன.24,2012. ஒருவர் ஒருவருடன் நன்கு தொடர்பு கொள்வதற்கு அமைதி மிகவும் முக்கியம் என்றும், ஒவ்வொருவரும் தங்களை அமைதிப்படுத்த வேண்டுமெனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
வருகிற மே மாதம் 20ம் தேதி சிறப்பிக்கப்படும் 46வது அனைத்துலக சமூகத் தொடர்பு நாளுக்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, இணையதளங்கள் மற்றும் 24 மணிநேர செய்திகளால் நிறைந்துள்ள இவ்வுலகில், நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒதுக்கப்படும் விலைமதிப்பற்ற நேரம், மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறர் தங்களிடம் சொல்வதையும், தாங்கள் பிறரிடம் சொல்வதையும் சிந்திப்பதற்கு மக்கள் அதிக நேரம் கொடுப்பதன் மூலம், பிறர் சொல்வதைக் கேட்பதற்கும், பிறரோடு நன்கு தொடர்பு கொள்வதற்கும் சிறிது மௌனம் காப்பது உதவியாக இருக்கின்றது என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அமைதி காப்பதன் மூலம், பிறர் பேசவும், பிறர் தன்னைப் பற்றி வெளிப்படுத்தவும் நாம் அவர்களை அனுமதிக்கிறோம், அதேசமயம், நாம் நமது வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டும் உட்பட்டு இருப்பதைத் தவிர்க்கிறோம் என்றும் அச்செய்தி கூறிகிறது.
மகிழ்ச்சியும் ஏக்கமும் துன்பமும் அமைதியில் வெளிப்படுத்தப்பட முடியும் எனவும், உண்மையில் இவ்வமைதி, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வல்லமைமிக்க வழியாக இருக்கின்றது எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
அமைதியும் வார்த்தையும் சமூகத் தொடர்பின் இரு கூறுகள் என்றுரைத்துள்ள திருத்தந்தை, மக்களுக்கிடையே உண்மையான உரையாடலும், ஆழமான உறவும் ஏற்பட வேண்டுமெனில், அமைதியும் வார்த்தையும் எப்பொழுதும் சமத்துவநிலையில் வைக்கப்பட வேண்டும், ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்வதாய் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிலவேளைகளில், மிக முக்கிய உண்மையான தொடர்பு, ஆழ்ந்த அமைதியில் இடம் பெறுகின்றது, அன்பு செய்யும் மனிதருக்கு இடையே இடம் பெறும் அடையாளங்கள், முகபாவனைகள், உடல்மொழி ஆகியவற்றால் ஒருவர் ஒருவருக்குத் தங்களை வெளிப்படுத்துகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
செபத்திற்கும், தியானத்திற்கும், இறைவனோடு அமைதியில் உறவாடவும் அமைதி உதவுகின்றது என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
“அமைதியும் வார்த்தையும் : நற்செய்தி அறிவிப்பின் பாதை” என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியை, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli தலைமையிலான குழு இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.
பத்திரிகையாளரின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. உலக சமூகத் தொடர்பு நாள், கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவிப் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
84 வயதாகும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன்னிலே அமைதியானவர், மெதுவாகப் பேசுபவர், பிறர் சொல்வதை நன்கு உற்றுக் கேட்பவர், இறையியலாளர் மற்றும் இசைப்பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.