2012-01-23 15:51:47

வாரம் ஓர் அலசல் - நீ பார்க்க விரும்பும் மாற்றம் நீயாக இரு


சன.23,2012. சிறு மனமாற்றம், மகத்தான உலகின் உதயம். ஒருவரின் சிறு மனமாற்றம், பலர் வாழ்வில் வசந்தம். மனமாற்றம் என்பது, முழுமனிதரையும் அவர் சார்ந்த சூழலையும் பாதிக்கும் ஒரு தொடர் செயல்பாடு. இதைத்தான் சில அரபு நாடுகளில் கடந்த ஆண்டு கண்டோம். இந்த 2012ம் ஆண்டில் மியான்மார் அரசியலிலும் நல்மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை தெரிகின்றது. பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி, அந்நாட்டின் இடைத்தேர்தலில் நிற்கப் போகிறார். 1978ம் ஆண்டில் ஏமன் நாட்டு அரசுத்தலைவர் பதவியைப் பிடித்த Ali Abdullah Saleh, நாட்டை விட்டு வெளியேறி விட்டார் எனவும், அவர் வழங்கிய பிரியாவிடை உரையில், தனது 33 வருட ஆட்சியில், நாட்டினரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கேட்டார் எனவும் இஞ்ஞாயிறன்று செய்திகள் வெளியாகியிருந்தன. மனமாற்றம் என்பது, முன்னிருந்த மோசமான நிலையிலிருந்து மாறுபட்ட நல்ல நிலையைப் பற்றிக் கொள்வது என்று சொல்லலாம்.
மருத்துவர் பெர்னார்டு நாத்தன்சன் (Dr.Bernard Nathanson) என்பவர், 1969ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய கருக்கலைப்பு உரிமை கழகத்தைத் தொடங்கியவர். இவரும் இவரது தோழர்களும் கருக்கலைப்புக்கு ஆதரவாகத் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்ததன் பயனாக, இந்த உரிமைக் கழகம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், அந்நாட்டு உச்சநீதிமன்றமே, ஒரு வழக்கில், கருக்கலைப்புக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்லியது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்மானம், வேறுசில நாடுகளிலும் கருக்கலைப்பு, சட்டப்படி அங்கீகரிக்கப்பட பாதை அமைத்தது. பெர்னார்டு நாத்தன்சன் 1945ம் ஆண்டில் தனது நண்பிக்குக் கருக்கலைப்பு செய்ததிலிருந்து இந்நடவடிக்கையில் இவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். நியுயார்க் நகரிலுள்ள உலகின் மிகப் பெரிய கருக்கலைப்பு மருத்துவ மையத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். தான் 75 ஆயிரம் கருக்கலைப்புக்களைச் செய்திருப்பதாக நாத்தன்சன் பெருமைப்பட்டுக் கொள்வாராம். இந்த யூதமத உலகாயுதவாதி, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, ஓர் உண்மையான கத்தோலிக்கராக இறந்தார். கத்தோலிக்கக் கோட்பாட்டின்படி கருக்கலைப்பு செய்வது பாவம். அப்படியானால், டாக்டர் பெர்னார்டு நாத்தன்சன், கத்தோலிக்கராக இறப்பதற்குக் காரணம் என்ன? அவரில் நடந்த மனமாற்றம் என்ன?
தாயின் வயிற்றில் உருவாகும் கருவுக்கு வாழ்வு இருக்கின்றதா? என்பது மதம் சார்ந்த கேள்வியே தவிர, அறிவியல் சார்ந்தது அல்ல என்று சொல்லி, தனது கருக்கலைப்பு ஆதரவு நடவடிக்கைக்கு நியாயம் சொல்லி வந்தவர்தான் நாத்தன்சன். ஆனால் அல்ட்ரா ஒலி புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், தாயின் வயிற்றில் வளரும் கரு, மற்ற மனிதரைப் போல, தனது பெருவிரலை சூப்ப முடியும் என்பது வெட்ட வெளிச்சமானது. அதிலிருந்து நாத்தன்சன், கருக்கலைப்புச் செய்வதைச் சிறிது சிறிதாக நிறுத்தி அந்த மருத்துவ மையத்திலிருந்தும் ஒதுங்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கருக்கலைப்பு செய்வதை முற்றிலுமாக நிறுத்தினார். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, The Silent Scream என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார். தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, கருக்கலைப்பின் போது எவ்வளவு துன்பப்படுகின்றது என்பதை அல்ட்ரா ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்படத்தின் மூலம், உலகினருக்குக் காட்டினார். ஆயினும், தான் நடத்திய ஆயிரக்கணக்கான கருக்கலைப்புக்களை நினைத்து உள்ளம் குத்துண்டவராய் மிகவும் வேதனைப்பட்டார். ஓப்புஸ் தேயி என்ற கத்தோலிக்கப் பக்த அமைப்பைச் சேர்ந்த ஓர் அருட்பணியாளரின் உதவியினால் இயேசு வழங்கும் மன்னிப்பை முழுமையாக உணர்ந்தார். தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றினார். தான் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், ஊடகங்களும், பொது மக்களின் கருத்துக் கணிப்புக்களும், விவகாரங்களை எவ்வாறு திரித்துச் சொல்ல முடியும் என்பதை விளக்கினார். மனித வாழ்வு, தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் தொடங்குகிறது என்பதை ஓர் அறிவியலாளர் என்ற விதத்தில், நான் அறிகிறேன் என்று எழுதினார். மருத்துவர் பெர்னார்டு நாத்தன்சன், தனது வாழ்க்கையின் முற்பகுதியில் கருக்கலைப்புக்கு எவ்வளவு ஆதரவாகச் செயல்பட்டாரோ, அவ்வளவு எதிர்ப்பாளராக பிற்பகுதியில் மாறினார்.
மாற்றம். இம்மாற்றம்தான், இனம், நிறம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி எல்லாரும் எதிர்பார்ப்பது. தொல்லைதரும் பிள்ளை மாறமாட்டானா? எனப் பெற்றோரும், குடிகாரத்தந்தை மாறமாட்டாரா? என முழுக்குடும்பமுமே எதிர்பார்க்கின்றனர். அடாவடி அரசியல்தலைவர்கள் மாற மாட்டார்களா? என உலக சமுதாயமே எதிர்பார்க்கிறது. தமிழகத்தின் இன்றைய நிலை பற்றிக் கருத்துச் சொன்ன ஓர் அரசியல்வாதி, “கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என்று சொல்லியிருக்கிறார். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், “இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், மற்றும் உயிர்ப்பில் வேரூன்றிய தனிமனித மனமாற்றம் மூலம் மட்டுமே கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பை அடைய முடியும்” என்று கூறினார்.
RealAudioMP3 ஆம் அன்பர்களே, “நீ உலகில் எந்த மாற்றத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதுவாகவே நீ மாறு”. மகத்தான மனிதரைப் பார்க்க ஆசையா, முதலில் நீ அந்த மகத்தான மனிதராக மாறு என்று ஒருவர் சொன்னார். ஒருவரில் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம், முழு உலக நிலைமையையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அடால்ஃப் ஹிட்லர் என்ற ஒரு தனிமனிதரில் ஒரு சிறுமாற்றம் ஏற்பட்டிருந்தால் இவ்வுலகில் எவ்வளவு துயரங்கள் குறைந்திருக்கும்! நற்சிந்தனையும் அர்ப்பணமும் நிறைந்த ஒரு சிறு குழு, உலகையே மாற்றும் என்பதில் சந்தேகமே எழக்கூடாது என்று சொன்னார் Margaret Mead. இந்த உலகில் பலர் தங்களது திறமைகளால் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்பதைக் குறைத்து எடை போடுகின்றனர். எனினும் ஆங்காங்கே தனிப்பட்ட மனிதர் பலர், உலகில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர் என்பது உண்மை. ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹசாரே ஒரு தனிமனிதர்தான். ஆப்ரிக்கக் கண்டத்தில் ஒரே பெண் அரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் Ellen Johnson Sirleaf, 2011ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற மூன்று பெண்களில் ஒருவர். 2006ம் ஆண்டிலிருந்து லைபீரிய நாட்டின் அரசுத்தலைவராகப் பணியாற்றி வரும் Ellen Johnson, கடந்த வாரத்தில், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, இரண்டாவது தடவையாக மீண்டும் பதவியேற்றார். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய Ellen Johnson, நாட்டில் சமத்துவத்தையும் ஒப்புரவையும் கொண்டு வருவேன் என்பதை உறுதிபட அறிவித்தார். லைபீரியா, பல வருட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடு ஆகும்.
RealAudioMP3 “நீ இவ்வுலகில் பார்க்க விரும்பும் சிறு மாற்றமாக முதலில் நீ இரு. அந்த மாற்றம் முதலில் உன்னிலிருந்து தொடங்கட்டும். இப்படி ஒவ்வொருவரும் தனக்குத்தானே சொல்லிப் பார்க்கலாமா அன்பு நெஞ்சங்களே. எப்படி இந்த மாற்றமாக மாற முடியும், இவ்வாறு இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். The Intention Experiment; The Field; The Bond போன்ற புத்தகங்களை எழுதிய Lynne McTaggart என்பவர், தான் வேலை செய்த இடத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு பெண் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்பெண், ஒரு மந்தமான, கலகலப்பற்ற கூட்டுறவு அமைப்பில் வேலை செய்தவர். ஒருநாள் அப்பெண், அவ்வமைப்பில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவரத் தீர்மானித்தார். சோடா மென்பானம் எடுப்பதற்காக அந்தத் தானியங்கி இயந்திரத்திற்குச் சென்ற போது, வேறு யாராவது ஒருவர் சோடா எடுப்பதற்குத் தேவையான சில்லறைக் காசுகளை அந்த இயந்திரத்திலே விட்டுவரத் தீர்மானித்தார். அத்துடன், இந்தச் சோடாவை எடுக்கும் அதிர்ஷ்டசாலி, அந்தப் பானத்தை மகிழ்ச்சியோடு குடிப்பாராக! என்று ஒரு சிறு குறிப்பையும் எழுதி அதில் ஒட்ட வைத்தார். அதேபோல் மற்ற இயந்திரங்களிலும் சில்லறைக் காசுகளைப் போட்டு ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார். அப்புறம் நடந்தது என்ன! குளிர்ந்த குடிநீர் வைக்கப்பட்டிருந்த இடம், மதிய உணவு நேரம், என எல்லா இடங்களிலும் இதைப் பற்றியேதான் பேச்சு நடந்தது. அந்தக் கூட்டுறவுப் பணியிடம் முழுவதும் அப்பெண்ணின் செயல் காட்டுத் தீ போல் பரவியது. பின்னர், அந்தக் கூட்டுநிறுவன மந்தமான சூழலே முற்றிலும் மாறிவிட்டது. அப்பெண்ணின் சிறு செயல் புதிய கூட்டுறவுக் கலாச்சாரத்தையே உருவாக்கி விட்டது.
அதேபோல், மற்றுமொரு பெண் தன்னைப் பார்க்க வருகிறவர்கள், இன்னும் தான் சந்திக்கச் செல்பவர்களிடம் நல்ல வசனங்கள் எழுதிய பேனாக்களைக் கொடுத்து வருகிறார். பேனாக்களை வாங்கி அதில் தானே நல்ல கூற்றுக்களை எழுதி அவற்றை மற்றவர்க்குக் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். அந்தப் பேனாவைப் பெறுகிறவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்துடன் அந்த வசனங்களையும் வாசித்துப் பயன் அடைகிறார்கள்.
அன்பர்களே, இந்தப் பெண்கள் போல நாமும் சிறு சிறு காரியங்களில் இறங்கலாமே. மகத்தான செயல்கள் யாவும், முதலில் “முடியும்” என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவைதான். சிறிய சிறிய அளவில் இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் நிறுத்தலாம். பிறரது நல்வாழ்வுக்கு வழி அமைக்கும் வார்த்தைகளைச் சொல்லலாம், செயல்களைச் செய்யலாம். வாரத்திற்கு ஒரு சிறு மரம் நட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடலாம். இணையதளங்களில் இயற்கை பராமரிப்புப் போன்ற படங்கள் மற்றும் செய்திகளை வெளியிடலாம். வசதி வாய்ப்பற்ற சிறாருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம். முதியோருக்கு உதவி செய்யலாம். சாலை விதிகளைச் சொல்லிக் கொடுத்து சாலை விபத்துக்களைத் தடுக்கலாம். இப்படி எத்தனையோ சிறுசிறு செய்ல்கள் இருக்கின்றன. இப்படிச் செய்து தனிமரமாக நிற்பவர்களைத் தோப்பாக மாற்றலாம். அதேசமயம், நீங்களும் புது மாற்றத்தை ஏற்படுத்தும் சூரியக் கதிர்களாக சுடர்விடலாம்.
மாற்றத்திற்கு வழிகளா இல்லை. வாழும் போதே வானத்தைத் தொட்டுவிட ஆசைப்பட வேண்டும். மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று ஓய்வதில்லை என்று மா சே துங் சொல்லியிருப்பது போல, மாற்றம் கொண்டு வரும் சுத்தக் காற்றாக நாம் மாற வேண்டாமா!. மாற்றம் பிறக்கட்டும். அது முதலில் தன்னிலிருந்தே பிறக்கட்டும். அப்போது உங்களது வரலாறும், நீங்கள் சாதிக்கப் பாடுபடும் சாதனைகளும் உங்களைப் புகழின் உச்சியில் நிறுத்தும்.








All the contents on this site are copyrighted ©.