2012-01-21 15:25:32

வத்திக்கான் உயர் அதிகாரி - கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்பு இயலக்கூடியதே என்ற நம்பிக்கையை இயேசு தருகிறார்


சன.21,2012. கிறிஸ்தவ சபைகள் மத்தியில் நிலவும் வரலாற்றுப் பிரிவினைகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இயேசு கிறிஸ்து அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 18 ம் தேதி தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்துப் பேசிய, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைச் செயலர் ஆயர் Brian Farrell, கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்புப் பற்றிப் பேசும் போது, முதலில் அது குறித்த இறையியல் நம்பிக்கை குறித்துப் பேச வேண்டும் என்றார்.
தமது திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாய் இருக்குமாறு இறுதி இரவு உணவின் போது இயேசு செய்த செபத்தில் நாம் பங்கு கொண்டால், திருஅவை தனது பிரிவினைப் பாவத்தால் தனது பணியை நிறைவேற்ற இயலாமல் இருக்கின்றது என்பதை நாம் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை, மனித முயற்சியினால் கட்டி எழுப்ப முடியாது என்றுரைத்த ஆயர் Farrell, இவ்வொன்றிப்பு, ஒரு கொடையாகவும், கிறிஸ்துவின் வெற்றிக்குச் சாட்சியாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்.
புனித பவுல் மனம் மாறிய விழாவான சனவரி 25ம் தேதியன்று இவ்வொன்றிப்புச் செப வாரம் நிறைவு பெறும். இச்செப வாரத்தை, கத்தோலிக்கம் உட்பட 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ சமூகங்களும் சிறப்பித்து வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.