2012-01-21 15:33:30

பாரம்பரிய நோய்களைத் தடுக்க உதவும் மரபணு ஆராய்ச்சி


சன.21,2012. பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஒரு முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக, பல பாரம்பரிய நோய்கள் முற்றிலுமாக இல்லாமல் போகிற நிலை உருவாகலாம் என பிரித்தானிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மைட்டோகொண்ட்ரியா என்ற உயிரணுக் கூறு வழியாக தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருகின்ற உடல் கோளாறுகளைத் தடுக்கின்ற வழிமுறை பற்றி ஆராயப்படவுள்ளது.
பெற்றோரிடம் இருந்து ஒரு கரு பெறுகின்ற மரபணுக்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பல நோய்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மைட்டோகொண்ட்ரியா என்பது மனித உயிரணு கிட்டத்தட்ட அனைத்திலும் உள்ள நுண் பொருள் ஆகும்.
மனிதனுடைய மூளையும், நரம்பு மண்டலமும், தசைகளும் ஒழுங்காக வேலை செய்ய இந்த மைட்டோகொண்ட்ரியாக்கள் அவசியமாகும்.
பாதிப்புள்ள மைட்டோகொண்ட்ரியாவை உடைய ஒரு தாய் அதனைக் கருவில் உள்ள தனது பிள்ளைக்கும் தந்துவிடுகிறார். அவர் அப்படித் தருவதைத் தடுப்பதற்கு மருத்துவத்தில் இதுவரை வழி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியா தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருவதை தடுக்க முடியும் என நியூகாஸ்ல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.