2012-01-21 15:41:31

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 வார்த்தைகள், வார்த்தைகளால் உருவாக்கப்படும் செய்திகள், அவற்றின் வலிமை இவைகளைப் பற்றி சிந்திக்க இன்று உங்களை அழைக்கிறேன். இந்த சிந்தனைகளின் சிகரமாக, இறைவார்த்தையால் உருவாக்கப்படும் நற்செய்தியின் வலிமையை நாம் இன்று ஓரளவு உணர்ந்தால் எவ்வளவோ பயன் பெறலாம்.
நமக்கெல்லாம் பழக்கமான ஓர் அனுபவத்துடன் இன்றைய ஞாயிறு சிந்தனையை நாம் துவக்குவோம். இரவு நேரம். வீட்டில் தொலைகாட்சியில் செய்திகள் காட்டப்படுகின்றன. தலைப்புச் செய்திகளில் ஆரம்பித்து, அரசியல், உலகம், பங்குச்சந்தை, விளையாட்டு, வானிலை அறிக்கை என்று செய்திகள் நம்முன் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக 30 நிமிடங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நாம் குறைந்தது 20 செய்திகளையாவது பார்க்கிறோம். நடுவில் வரும் விளம்பரங்களையும் நாம் அறிவிப்புக்களாக, செய்திகளாக எடுத்துக் கொண்டால், நாம் பார்க்கும் செய்திகள் 40க்கும் மேல் இருக்கும்.
தொலைக்காட்சி மட்டுமில்லாமல், நாம் வாசிக்கும் நாளிதழ்கள், கேட்கும் வானொலி, அல்லது நமது செல்லிடப் பேசியில் வரும் SMS குறுஞ்செய்திகள் என்று நம்மை ஒரு நாளில் வந்தடையும் செய்திகள் குறைந்தது 100 இருக்கும். இந்த நூறு செய்திகளில் எத்தனை செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன? வானிலைச் செய்திகளை நாம் நம்பத் தயாராக இருந்தால், அந்த வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னால், அந்தச் செய்தி நம்மைச் செயல்படத் தூண்டும். அதாவது, நாம் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வோம். நம்மில் ஒரு சிலர் பங்குச்சந்தை நிலவரங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றால், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று அன்றைய செய்தி நமக்கு வழிகாட்டலாம். ஒருவேளை விளம்பரங்களில் வரும் தள்ளுபடி விற்பனை செய்திகள் நம்மை கொஞ்சம் அதிகமாக செயல்பட வைக்கலாம். இப்படி நம்மை வந்தடையும் 100 செய்திகளில் ஓரிரு செய்திகளே நம்மைச் செயலுக்கு அழைத்துச் செல்கின்றன. மற்றபடி நம்மை வந்தடையும் 90க்கும் அதிகமான செய்திகள் நமது அறிவுப் பசிக்கு உணவுதரும் செய்திகள் தான். அச்செய்திகளைப் பற்றி நாம் நமது நண்பர்களோடு பேசி பொழுதைப் போக்கலாம்.
தகவல் தொடர்புகளில், தகவல் பரிமாற்றங்களில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நமது உலகில் செய்திகள் பரிமாறப்படும் வேகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் ஒருசில நிமிடங்களில் நம் வீட்டுக்கு கொண்டு வரும் அளவு நமது தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. நம்மை ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச் செய்யும் இந்தச் செய்திகள் எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே நாம் இன்று எழுப்பும் முக்கிய கேள்வி. இப்படி ஒரு கேள்வியை எழுப்ப நம்மைத் தூண்டுவது இன்றைய ஞாயிறு வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்று இறைவாக்கினர் யோனாவை ஆண்டவர் அனுப்புகிறார். அவர் சொல்லி அனுப்பும் செய்தி என்ன? “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” (இறைவாக்கினர் யோனா 3: 1-5, 10)
மாற்கு நற்செய்தியின் முதல் வரியில் நாம் வாசிப்பது இது: கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: (மாற்கு நற்செய்தி 1: 1)
சில வரிகளுக்குப் பின், மீண்டும் முதல் பிரிவு 14ம் திருவசனத்தில் “யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி பகுதி இந்த வரிகளுடன் ஆரம்பமாகிறது.
யோனாவுக்கு இறைவன் தந்த செய்தி, இயேசு பறைசாற்றிக் கொண்டே வந்த கடவுளின் நற்செய்தி இவ்விரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால் இவை நல்ல செய்திகள் போலத் தெரியவில்லை. ‘நினிவே அழியப்போகிறது’ என்ற செய்தியும், ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளும் நல்ல செய்திகளா? ஆம், இவை நல்ல செய்திகள். நல்ல செய்தியைப் பற்றி, நற்செய்தியைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் செய்திகள்.
நற்செய்தி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் Euangelion என்று கூறப்படுகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய “Jesus of Nazareth” என்ற புத்தகத்தில் Euangelion என்ற கிரேக்க வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
“Euangelion என்ற வார்த்தையை நாம் 'நற்செய்தி' அதாவது, 'நல்ல செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். இந்த மொழி பெயர்ப்பு நம்மை ஈர்க்கிறது. ஆனால், Euangelion என்ற கிரேக்கச் சொல்லின் ஆழத்தை 'நல்ல செய்தி' என்ற மொழிபெயர்ப்பு புரியவைக்கவில்லை.
“இந்த வார்த்தை உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய வார்த்தை. இப்பேரரசர்கள் மக்கள் மீது முழு அதிகாரம் கொண்டவர்களாக, மக்களையும் இந்த உலகையும் காப்பவர்களாக தங்களையே எண்ணி வந்தனர். அவர்கள் தந்த செய்திகள் எல்லாமே Euangelion என்று சொல்லப்பட்டது. அச்செய்திகள் மகிழ்வான, இதமான செய்திகளாக இருந்தனவா என்பது கணக்கில்லை. பேரரசரிடமிருந்து வந்த செய்தி என்பதால் அது பாதுகாக்கும் சக்தி பெற்றதென்று கருதப்பட்டது. அது வெறும் தகவல்களைத் தரும் செய்தி அல்ல. மாறாக, உலகை மாற்றக்கூடிய அதிலும் உலகை உயர்ந்ததொரு நிலைக்கு மாற்றக் கூடிய வலிமை பெற்ற செய்தி என்று கருதப்பட்டது.
“உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய Euangelion என்ற கிரேக்கச் சொல்லை நான்கு நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாம் நான்கு நற்செய்திகள் என்று குறிப்பிடுகிறோம்.
கடவுளாக, மனிதர்களைக் காப்பவராக தன்னையேத் தவறாக எண்ணி வந்த பேரரசன் பயன்படுத்திய Euangelion என்ற வார்த்தை இயேசுவில் தன் முழுமையானப் பொருளைக் கண்டது.
“நாம் இன்று பயன்படுத்தும் ஒரு சில சொற்றொடர்களை Euangelion என்ற வார்த்தையை விளக்க நாம் பயன்படுத்தலாம். தகவல் பரிமாற நாம் பேசுவது informative speech. செயல்படத் தூண்டும் வகையில் நாம் பேசுவது performative speech. நாம் கேட்கும் நற்செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டும் செய்திகள்” என்று திருத்தந்தை இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நற்செய்தி என்ற சொல்லில் நல்ல+செய்தி என்ற இரு வார்த்தைகள், இரு அம்சங்கள், இரு உண்மைகள் போதிந்துள்ளதைக் காணலாம். 'நல்ல செய்தி' என்றதும், இதமான, மகிழ்வான செய்தி என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. நாம் சிந்திக்கும் நற்செய்தி பல நேரங்களில் இதமாக, மகிழ்வாக இருக்காது. 'நினிவே அழியப்போகிறது' என்பது எப்படி இதமான, மகிழ்வான செய்தியாக இருக்க முடியும்? ஆனால், நற்செய்தி என்ற சொல்லுக்கு, நன்மை விளைவிக்கும் செய்தி என்று பொருள் கொண்டால், அதன் முழு அர்த்தமும் விளங்கும். இந்த கோணத்தில் பார்த்தால், ‘நினிவே அழியப்போகிறது’ என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்த நகரமே விழித்தெழுந்தது. யோனா வழங்கிய அந்தக் கொடூரமான செய்தி அந்நகரைக் காப்பாற்றியது. எனவே இது நல்ல செய்தியானது. இப்படி சொல்லப்படும் செய்திகள் எனக்கு கத்தியை நினைவுபடுத்துகின்றன.
அறுவைச் சிகிச்சையில், அல்லது சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் கத்திகள் குத்தும், வெட்டும், கிழிக்கும்... ஆனால், இறுதியில் அந்தக் கத்திகள் நன்மைகளைப் படைக்கும். அதுபோன்றது இறைவாக்கு, நற்செய்தி... இந்தப் பொருளில்தான் இறைவார்த்தை இருபுறமும் கூரான வாள் என்று எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
நற்செய்தி அல்லது நல்ல செய்தியில் இரண்டாம் வார்த்தை செய்தி... இங்கு செய்தி என்ற சொல் வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. செயல்களுக்கு அழைத்துச் செல்லும் செய்திகள் இவை. மிக விரைவில் தொடர்புகள் நடைபெறும் இந்தக் காலத்தில் நம்மை வந்தடையும் பல செய்திகள் நம்மைச் செயல் இழக்கச் செய்துள்ளன என்று துவக்கத்தில் சொன்னோம். நமது இன்றையச் சூழலில் செய்திகள் தேவைக்கு அதிகமாய் ஒரு கடல் போல வந்து சூழ்ந்து நம்மைச் செய்திகளில் மூழ்கச் செய்துவிடுவதால், நாம் செயல் இழந்து போகிறோம். இந்தக் கடலில் நாம் ஆழ்ந்து முத்தெடுப்பதும் இல்லை. கடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. இந்தக் கடலில் மிதந்து வருவதிலேயே சுகம் காண்கிறோம்.
இறுதியாக ஓர் எண்ணம்... பல நேரங்களில் நாம் வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள் வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும் என்பதை அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.
ஒரு நாள் அசிசி நகர் புனித பிரான்சிஸ் தன்னுடன் ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும் நேரத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை மீண்டும் மரமேறி அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். போகும் வழியில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத் தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார். "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோனா வழியாகத் தரப்பட்ட அந்த அழிவுச் செய்தி நினிவே மக்களை மனம் மாற்றியது. அழிவிலிருந்து காத்தது. இன்றைய நற்செய்தியில் "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு பலரை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. அவர்களில் அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மீன்பிடித் தொழிலாளிகள் இயேசுவின் அழைப்பைக் கேட்டு, தங்கள் உடைமைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
நன்மை பயக்கும் செய்திகளைத் தரும் கருவிகளாக நாம் மாற வேண்டும். நாம் பரிமாறும் செய்திகள் வெறும் தகவல் பரிமாற்றமாக இல்லாமல், செயலுக்கு, அதுவும், உன்னதமானச் செயலுக்குத் தூண்டும் சவால்களாக அமைய வேண்டும். அனைத்திற்கும் மேலாக, வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வின் மூலம் நற்செய்தியைப் பறைசாற்றும் கருவிகளாக நாம் மாற வேண்டும் என்று செபிப்போம்







All the contents on this site are copyrighted ©.