2012-01-20 15:54:28

இந்தியாவில் மரணதண்டனையை இரத்து செய்ய கிறிஸ்தவ சபைகள் வலியுறுத்தல்


சன.20,2012. இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டம் இரத்து செய்யப்படுமாறு நாட்டின் கிறிஸ்தவ சபைகளும் பொது மக்கள் சமுதாயமும் நடுவண் அரசை விண்ணப்பித்துள்ளன.
இந்திய அரசு, மரணதண்டனையை இரத்து செய்வதற்குத் தான் கொண்டுள்ள அர்ப்பணத்தை, வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டுமெனவும் கிறிஸ்தவ சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இவ்வாண்டு மே மாதத்தில் ஐ.நா.வில் சமர்ப்பிப்பதற்கென, இந்திய வெளிவிவகார அமைச்சகம் மனிதஉரிமைகள் குறித்த தேசிய அளவிலான அறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளது. இவ்வறிக்கையை வைத்தே பொதுநல சமூகம், மரணதண்டனையை இரத்து செய்யக் கோரிக்கை எழுப்பி வருகிறது.
1950ம் ஆண்டின் இந்திய அரசியல் அமைப்பில் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டம் குறிக்கப்பட்டிருந்தாலும் 2004ம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும், இந்தியச் சிறைகளில், 400க்கும் மேற்பட்ட மரணதண்டனை கைதிகள் உள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.