2012-01-19 14:43:30

மனித வாழ்வு, குடும்பம், பாலினம் குறித்த எண்ணங்கள் ஆகியவற்றில் கிறிஸ்தவ சபைகள் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் : திருத்தந்தை


சன.19,2012. பின்லாந்து நாட்டில் கிறிஸ்தவ பாரம்பரியங்களுக்கு இடையே உள்ள ஒன்றிப்பின் வளர்ச்சி மேலும் தொடரவேண்டும் எனத் தான் ஆவல் கொள்வதாக, அந்நாட்டிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், பின்லாந்து நாட்டு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கர், லூத்தரன், கிறிஸ்தவர் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே நிலவும் ஆழமான நட்புணர்வு, கிறிஸ்தவர்களிடையே பிரிவுகளைக் களைவதற்கு சரியான பாதையைக் காட்டுவதாக என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
அறநெறி சார்ந்த கேள்விகள், குறிப்பாக மனித இயல்பு மற்றும் மாண்பைப் புரிந்து கொள்வதில் அண்மைக் காலங்களில் எழும் வேறுபாடுகளே கிறிஸ்தவர்களிடையே பிரிவினைகளை உருவாக்கும் காரணங்களாக உள்ளன என்று கூறியத் திருத்தந்தை, மனித வாழ்வு, குடும்பம், பாலினம் குறித்த எண்ணங்கள் ஆகியவற்றில் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நமக்கு முன் சென்றுள்ளவர்களின் உயரிய சாட்சியங்களைப் பின்பற்றி, நம் புனிதத்துவத்தைப் புதுப்பிக்கவும், கிறிஸ்தவ அறநெறிகளை வெளிப்படையாகக் கடைபிடிக்கவும் இந்தச் சந்திப்பில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16 ம் பெனடிக்ட்







All the contents on this site are copyrighted ©.