2012-01-19 14:42:33

திருத்தந்தை : கிறிஸ்தவ விசுவாசத்திலும், நன்னெறிக் கண்ணோட்டத்திலும் பொது நிலையினரையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்குவது அமெரிக்கத் திருஅவையின் தலையாயக் கடமை


சன.19,2012. சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத் திருஅவை மாறாத நன்னெறி உண்மைகள் அடங்கிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்க அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டு ஆயர்களும் வத்திக்கானில் கூடி திருத்தந்தையைச் சந்திக்கும் 'Ad Limina' சந்திப்பிற்காக வந்திருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாடு உருவானபோது எழுதப்பட்ட அடிப்படை சட்ட திட்டங்கள் இறைவன், நன்னெறி ஆகிய உண்மைகளின் மீது அமைந்துள்ளன என்பதைத் தன் உரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டத் திருத்தந்தை, அண்மையக் காலங்களில் இந்த அடிப்படை உண்மைகள் சிறிது சிறிதாக மறைந்து வருவதைக் குறித்து தன் கவலையையும் வெளியிட்டார்.
விசுவாசம், தனி மனித அறிவு இரண்டும் கொண்டிருக்கும் உறவை மதிக்க வேண்டும் என்பதை அமெரிக்கத் தலத் திருஅவை நீண்ட காலமாகக் கூறிவந்துள்ளது என்றாலும், தனி மனித அறிவு, சுயநலம் என்ற போக்கில் அதிகம் வளர்ந்து, நன்னெறிகளை மறக்கும்போது மக்களுக்கு நன்னெறிகளை மீண்டும் நிலைநிறுத்தும் கடமையையும் திருஅவை கொண்டுள்ளது என்பதைத் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மத நிறுவனங்களும் அரசும் தனித் தனியே இயங்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும், அரசு சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் திருஅவைக்கு இல்லை, மாறாக, அரசு வெளியிடும் கொள்கைகள் தனி மனித விசுவாசக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்கையில் திருஅவை கேள்விகள் கேட்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
அமெரிக்க மண்ணில் மதச் சுதந்திரம் அதிகம் போற்றப்படும் ஒரு அடிப்படை விழுமியம் என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த திருத்தந்தை, மதச் சுதந்திரம் என்பதை வெறும் வழிபாட்டுச் சுதந்திரம் என்று குறைத்துவிடும் போக்கு அதிகரித்து வருவதையும் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.அமெரிக்கத் தலத் திருஅவை அரசியலில் ஈடுபட்டுள்ளோருடன் கொண்டுள்ள தொடர்பைப் பாராட்டித் திருத்தந்தை, கிறிஸ்தவ விசுவாசத்திலும், நன்னெறிக் கண்ணோட்டத்திலும் பொது நிலையினரையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்குவது தலத் திருஅவையின் தலையாயக் கடமை என்பதையும் எடுத்துரைத்தார்.
அமெரிக்கக் காலாச்சாரத்தை நற்செய்தியின் அடிப்படையில் உருவாக்குவது நற்செய்தியைப் பரப்பும் புதிய வழி என்பதையும் தன் உரையில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை16ம் பெனடிக்ட், அமெரிக்க நாட்டை அன்பு கலாச்சாரத்தில் வளர்க்க அமெரிக்க ஆயர்கள் உழைக்க வேண்டும் என்ற சிறப்பான வேண்டுகோளையும் முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.