2012-01-18 15:26:19

காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்க கோவில்களில் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும்


சன.18,2012. சனவரி மாதம் முழுவதும் காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும் என்று காங்கோ ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மரியன்னையை நோக்கி மனங்களை எழுப்பும் இந்த மூவேளை செப நேரத்தில் தங்கள் நாட்டில் அமைதி வேரூன்ற மக்கள் சிறப்பாக மன்றாட வேண்டுமேன்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமான இந்த முயற்சி வன்முறையற்ற வகையில் காங்கோ நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வரும் என்று தாங்கள் நம்புவதாக ஆயர் பேரவையின் இந்த அறிக்கையை வெளியிட்ட ஆயர் பேரவைச் செயலர் அருள்தந்தை Leonard Santedi கூறினார்.
குடியரசின் விதி முறைகளைப் பின்பற்றி தேர்தல்கள் நடைபெற்று, தலைவர்களைத் தேர்ந்தேடுப்பதற்குப் பதில் மறைமுகமான வழிகளில் தலைவர்கள் பதவியேற்றிருப்பது நாட்டிற்கே ஓர் அவமானம் என்று கூறிய ஆயர்கள், காங்கோ மக்கள் தங்கள் அரசை அமைக்கும் முயற்சிகளுக்கு அகில உலகச் சமுதாயம் ஆதரவு தர வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.