2012-01-18 15:26:02

கல்வி உரிமைச் சட்டம் இந்தியாவில் கிறிஸ்தவ பள்ளிகளுக்குத் தொல்லைகள் தரும்


சன.18,2012. கல்வி உரிமைச் சட்டம் என்ற பிரச்சனைக்குரிய ஒரு சட்டத்தின் மூலம் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு நேரவிருக்கும் தொல்லைகளை எதிர்க்க வேண்டும் என்று டில்லி உயர்மறைமாவட்ட துணை ஆயர் Franco Mulakkal கூறினார்.
சிறுபான்மை மொழி மற்றும் மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் விருப்பப்படி கல்வி முறையை உருவாக்கி, தங்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு இந்தியச் சட்டம் 31 பிரிவு 1 தந்துள்ள உரிமையில் இப்புதிய சட்டம் தலையிடுகிறது என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் செயலர் அருள்தந்தை Kuriala Chittattukalam கூறினார்.
அரசின் இந்த தலையீடு தங்கள் கல்வி நிறுவனங்களைப் பெருமளவு பாதிக்கும் என்பதால், கிறிஸ்தவப் பள்ளிகளைச் சிலநாட்கள் மூடிவிட்டு, குழந்தைகளின் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும், இந்த வழிமட்டுமே அரசின் கவனத்தை இப்பிரச்சனையின் பக்கம் திருப்பும் என்றும் ஆயர் Mulakkal கூறினார்.
இச்சட்டத்தின் மூலம், கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்கள், வகுப்புக்களை நடத்தும் முறை, தேர்வுகளின் முடிவுகள் என்று பல அம்சங்களிலும் அரசின் தலையீடு இருப்பதை பல கிறிஸ்தவப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வன்மையாக விமர்சித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.