2012-01-18 15:25:35

இப்புதன்கிழமை முதல் உலகெங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது


சன.18,2012. இப்புதன்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை கொண்டாடப்படும் புனித பவுல் அடியாரின் மனமாற்றத் திருவிழா வரை உலகெங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கொண்டாடப்படுகிறது.
இவ்வொன்றிப்பு செப வாரம் குறித்து கடந்த ஞாயிறு மூவேளை செபத்தின்போதும், இப்புதன் பொது மறைபோதகத்தின்போதும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றி வழியாக நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்” என்று கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் புனித பவுல் அடியார் கூறியுள்ள கூற்று இவ்வாண்டின் மையப் பொருளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பயன்படுத்தப்படும் செபங்களை போலந்து நாட்டில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, ஆர்த்தடாக்ஸ் சபை, மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள் இணைந்து தயாரித்துள்ளன.
உலகெங்கும் உள்ள 349 கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைந்த அமைப்பான WCC என்று அழைக்கப்படும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒவ்வோர் ஆண்டும் இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கொண்டாடி வருகிறது. கத்தோலிக்கத் திருஅவை இந்தக் குழுவில் ஓர் உறுப்பினர் இல்லையெனினும், WCCயின் முயற்சியான கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்று வருகிறது.








All the contents on this site are copyrighted ©.