2012-01-17 15:01:51

கவிதைக் கனவுகள் - கிழக்கைச் சிவக்க வைப்போம்


கிழக்கு இந்த நாட்டில் இன்று தூரமானது - அது
வெளுக்கும் என்று பார்த்த விழிகள் காரமானது
ஆயிரமாய் விழிகள் நெருப்புக் கோளமானது - அந்த
ஞாயிறையும் மிஞ்சும் உதயம் உறுதியானது

பொறுமை கொண்டு பூமி ஆளும் கதையை நம்பினோம் - இன்று
அடிமை நாய்கள் போல தினமும் மண்டியிடுகிறோம்
அச்சுறுத்தி அடிமைகளாய் நம்மை நடத்திடும் - அந்த
எத்தர்களை எதிர்த்து நின்று விண்ணைத் தட்டுவோம்

குட்டக் குட்டக் குனிந்து போகும் மடமை ஏனடா - இது
திட்டமிட்டு நம்மக் கொல்லும் அமைப்பு தானடா
சட்டதிட்டம் அனைத்தும் இன்று விற்பனைக்குத்தான் - இங்கு
சத்தியத்தைப் பொறுக்க வேண்டும் குப்பைமேட்டில்தான்

கிழக்கு வெளுக்க வேண்டாம் - இனி
பழைய கதைகள் வேண்டாம்
கிழக்கைச் சிவக்க வைப்போம் - நம்
வழக்கை நாமே தீர்ப்போம்








All the contents on this site are copyrighted ©.