2012-01-16 15:10:24

மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள காரித்தாஸுக்கு இந்திய அரசு அழைப்பு


சன.16,2012. இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள காரித்தாஸ் அமைப்பை அணுகியுள்ளோம் என்று இந்திய அமைச்சர் ஒருவர் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் போன்ற பிறரன்பு அமைப்புக்கள் வழியாகவும், இன்னும் பிற மதங்களின் பிறரன்பு அமைப்புக்கள் வழியாகவும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஓடிஸா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள இந்திய அரசு முயன்று வருவதாக கிராம முன்னேற்றத் துறையின் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
காரித்தாஸ் போன்ற பிறரன்பு அமைப்புக்கள் மதங்களைக் கடந்து பணிகள் செய்யும் ஒரு பொது அமைப்பு என்ற கண்ணோட்டத்தில் இந்த அழைப்பை இவ்வமைப்பிற்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் எடுத்துரைத்தார்.
அமைச்சர் ரமேஷை இவ்வாரத்தில் சந்தித்து முன்னேற்ற பணிகள் பற்றி அவருடன் கலந்து பேச இருப்பதாக, இந்த மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே பணிகள் செய்துவரும் காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை வர்கீஸ் மட்டமனா கூறினார்.
இந்த முன்னேற்றப் பணிகளில் ஈடுபட ராமகிருஷ்ணா அறக்கட்டளையையும் இந்திய அரசு அணுகியுள்ளதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.