2012-01-16 15:08:23

பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க சீரோ மலபார் ரீதி திருஅவையின் முடிவுகள்


சன.16,2012. திருஅவையின் செயல்பாடுகள் இவ்வுலகில் இன்னும் வெளிப்படுவதற்கு பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று கேரளாவின் சீரோ மலபார் ரீதி திருஅவை முடிவுகள் எடுத்துள்ளது.
கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள சீரோமலபார் ரீதி தலைமை பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியின் தலைமையில் நடைபெற்ற சீரோ மலபார் திருஅவையின் உயர்மட்டக் கூட்டத்தில் குழந்தைகள், இளையோர், பெண்கள் என்று பொதுநிலையினரின் பல பிரிவுகள் மேற்கொள்ளக்கூடிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் கீழைரீதி சபைகளின் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri உட்பட 43 ஆயர்கள் கலந்து கொண்டனர் என்று UCAN செய்திக்குறிப்பு கூறுகிறது.
பொது நிலையினரின் பங்களிப்பு இல்லையெனில் கத்தோலிக்கத் திருஅவை இயங்குவதும், வளர்வதும் இயலாது என்பதால், அவர்களது பங்களிப்பை ஊக்கப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க கீழைரீதி சபைகளின் சார்பில் பேசிய அருள்தந்தை Paul Thelakat கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வாண்டில், நலவாழ்வு, கல்வி, வரலாறு, இலக்கியம், அறிவியல், வேளாண்மை, ஊடகங்கள் என பலத் துறைகளிலும் பொதுநிலையினர் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று UCAN செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.