2012-01-14 12:55:52

திருத்தந்தையின் அமைதியின் விழுமியங்களை நேபாளக் கத்தோலிக்கப் பள்ளிகள் கடந்த 60 வருடங்களாகப் போதித்து வருகின்றன


சன.14,2012. நேபாளத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக கத்தோலிக்கப் பள்ளிகள், அமைதி மற்றும் நீதியின் விழுமியங்களைக் கற்பித்து வருவதால் அவை சிறந்த பள்ளிகளாக நோக்கப்படுகின்றன என்று நேபாள இயேசு சபை வட்டார அதிபர் கூறினார்.
நேபாளத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள இயேசு சபை அருள்தந்தை இலாரன்ஸ் மணியார் ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இத்தகைய விழுமியங்களின் அடிப்படையில் செயல்படாத பள்ளிகளில், சிறுபான்மையினர்மீது இந்துத் தீவிரவாதமும் சகிப்பற்றதன்மையும் பரவலாகக் காணப்படுகின்றன என்று கூறினார்.
நேபாள அரசர் பிரேந்திராவும் அரசி ஐஸ்வரியாவும், இந்தியாவின் டார்ஜிலிங் மற்றும் கர்சியாங்கிலுள்ள இயேசு சபைப் பள்ளிகளில் கற்றதன் பயனாக, 1950ம் ஆண்டில் நேபாளத்தில் பள்ளியைத் திறக்க இயேசு சபையினர் அழைக்கப்பட்டனர். தற்சமயம் இயேசு சபையினர், நேபாளத்தில் 33 நடுத்தரப் பள்ளிகள், நான்கு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியை நடத்துகின்றனர்.
நேபாளத்தின் 2 கோடியே 90 இலட்சம் மக்களில், 3 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.