2012-01-14 12:58:13

இந்தியாவில் அரசு நிர்வாகப் பணியிலுள்ள அதிகாரிகள், திறமை குறைந்தவர்கள் - ஹாங்காங் கன்சல்டன்ஸி நிறுவனம் கணிப்பு


சன.14,2012. இந்தியாவில் அரசு நிர்வாகப் பணியிலுள்ள அதிகாரிகள், ஆசியாவிலுள்ள மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர் என ஹாங் காங்கைச் சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியட்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89), தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25), ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளில் பெரும்பாலானோர் இரகசியமாக கையூட்டு வாங்குபவர்களாகவும், தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்து ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர். இதுபோன்ற அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்களும் இணங்கிச் சென்று அதிக ஆதாயம் அடைகின்றன. அவர்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என மேலும் அதில் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனைக் கொடுக்காதபோது, அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்புகாட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.