2012-01-14 12:52:04

இந்தியாவில், கடந்த ஆண்டில் இரண்டாயிரத்துக்கு அதிகமானக் கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகளை எதிர்நோக்கினர் – CSF அறிக்கை


சன.14,2012. இந்தியாவில், கடந்த ஆண்டில் 2141 கிறிஸ்தவர்கள், காழ்ப்புணர்வையும், தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்நோக்கினர் என்று "Catholic Secular Forum" (CSF) என்ற ஓர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் ஆதரவுடன், இந்தியக் கத்தோலிக்கரால் ஆரம்பிக்கப்பட்ட CSF என்ற இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு, 2011ம் ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கிய அடக்குமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்துத் தீவிரவாதக் குழுக்களால் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், 2012ம் ஆண்டில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 3 முதல் 5 என நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது ஆயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவ மறைபோதகர்கள், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், இது இந்துமதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இந்துத் தீவிரவாதக் குழுக்கள் கூறிவருவது உண்மையல்ல என்று கூறும் இவ்வறிக்கை, 1972ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2.6 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள், 1981ம் ஆண்டில் 2.44 விழுக்காடாகவும், 2001ம் ஆண்டில் 2.30 விழுக்காடாகவும் குறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.