2012-01-13 14:55:15

சன 13, 2012. கவிதைக் கனவுகள்.......... போகிறதே போகி


பொங்கலுக்கு முன் போகி எதற்கு?
போகிறதைப் போக விட்டு புதுமைக்கு இடமளிக்கவா?
போகிறதைத் தீ மூட்டி பொசுக்கத்தான் வேண்டுமா?
மழைதரும் இந்திரன் பெயரில் தீமூட்டி திருவிழாவா?
புகைப்போக்கிகளே மறைந்து வரும் நவீன நாட்களில்
புகையில்லாப் போகிகளே நமக்கு வேண்டும்.
தேவையற்றவைகளைக் கொளுத்துகிறோம்.
பயனுள்ளவைகளை மட்டுமே வாங்கியிருந்தால்
போகி எதற்கு?
பொங்கலுக்குச் சுத்தம் செய்வோம்,
மனையைப்போல் மனதையுமே.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகி என்றால்
வெறுப்பு, பகை, தோல்வி எனும்
எண்ணங்களைக் கொளுத்துவோம்.
புதுப்புனலாய் பொங்குவோம்.
நன்மைகள் பிறக்க தீமைகள் அழிவது இயல்பே.
கனிகள் விளைய களைகள் அகல்வது முறையே.
பொங்கலின் முன்னறிவிப்பாம் போகியில்
மன அழுக்குகள் எரியட்டும். வழி பிறக்க
தைப்பொங்கல் மலரட்டும்.
களித்துண்டு வாழ்வோம். போகியின்
கரித்துண்டுகள் மறந்து.








All the contents on this site are copyrighted ©.