2012-01-12 15:01:57

பாகிஸ்தான் அரசால் லாகூரில் கிறிஸ்தவ கோவில் இடிப்பு


சன.12,2012. பாகிஸ்தானின் லாகூரில் கிறிஸ்தவ கோவில் ஒன்றையும் அருகிலிருந்த ஒரு தையல் பள்ளியையும் நகராட்சி அதிகாரிகள் இச்செவ்வாயன்று இடித்துத் தள்ளியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இப்புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“கோவில் சொத்துக்களைக் காப்பாற்று”, “நிலங்களை அபகரிக்கும் முதலைகளை எதிர்க்கிறோம்” என்ற கோஷங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மூன்று மணி நேரங்கள் நீடித்ததாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
இந்த இடிபாடுகளால் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விவிலியம் மற்றும் பிற வழிபாட்டுப் பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani, கூறினார்.
லாகூர் பிறரன்பு சங்கம் 1887ம் ஆண்டு அனைத்து அரசு விதி முறைகளுடன் வாங்கிய அந்த நிலத்தின் பத்திரங்களை அருள்தந்தை Mani செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
சட்டத்திற்குப் புறம்பான வழியில், எவ்வித அதிகாரமும் இல்லாமல் அரசு அதிகாரிகளே நிலங்களை பறிப்பதற்கு மேற்கொண்ட இந்த செயல்பாடு, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது அரசு காட்டும் அக்கறையின்மையின் மற்றொரு வெளிப்பாடு என்று தல கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.