சன.12,2012. ‘யுனிவர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில்
பெரும்பகுதியாக இருப்பது ‘டார்க் மேட்டர்’ என்கிற விவரிக்கமுடியாத இருண்ட பொருள். நம்
கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே
அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம்
பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது
என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை. அப்படியானதொரு வரைபடம்
தயாரிப்பதில் வானியல் அறிவியலாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்காவின்
ஹூஸ்டனில் இவ்வியாழனன்று நிறைவுற்ற 219வது வானிலை ஆய்வு பற்றிய கருத்தரங்கில் அறிவித்திருக்கிறார்கள். அமெரிக்க
வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க
முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய
வரைபடமாக கருதப்படுகிறது. இதில் ஆர்வம்தரும் தகவல் என்னவெனில் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு
பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய
தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம்
கண்டிருக்கிறார்கள். இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில்,
‘கேலக்ஸிஸ்’ எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக
காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் இது சென்று முடிவதாகவும்
இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.