2012-01-11 15:34:39

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


சன 11, 2012. மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் இத்தாலியில் கிறிஸ்து பிறப்புக் காலக் கொண்டாட்டம் என்பது சனவரி மாதம் ஆறாம் தேதி திருக்காட்சி திருவிழா வரைத் தொடரும் ஒன்று. பள்ளிகளுக்கெல்லாம் அதுவரை விடுமுறைதான். பன்னிரெண்டு நாள் விழாக்கொண்டாட்டங்கள் நிறைவுற்று, ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், திருப்பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் புதன் பொது மறைபோதகத்தையொட்டி வத்திக்கானிலுள்ள பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கிறிஸ்தவ செபம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தன் திரு உடல் மற்றும் திரு இரத்தத்தின் அருளடையாளமாகிய திருநற்கருணையை இறுதி இரவு உணவின்போது இயேசு உருவாக்கிய வேளையில் அவர் செபித்த செபம் குறித்து இன்று நோக்குவோம் என இப்புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் பாப்பிறை. இயேசு தன்னையே கொடையாகக் கையளித்தது, அவரின் சிலுவைப் பலி மற்றும் மகிமை நிறை உயிர்ப்பின் முன்னறிவிப்பாக இருந்தது. இயேசு மற்றும் அவரின் திருச்சபையின் மிக உன்னத செபமே திருநற்கருணை. பாஸ்காத் திருவிழா மற்றும் இஸ்ராயேலின் விடுதலை குறித்த நினைவுகளுக்கு புது அர்த்தம் கொடுத்த இறுதி இரவு உணவில் இயேசுவின் செபம் எபிரேயர்களின் ஆசியுரை ஒன்றை எதிரொலிப்பதாக உள்ளது. எபிரேயர்களின் இந்த செபம் நன்றியறிவித்தலையும் ஆசீர் எனும் கொடையையும் உள்ளடக்கியது. தான் இறப்பதற்கு முந்தைய அந்த இரவில் இயேசு, அப்பத்தைப் பிட்டு கிண்ணத்தைக் கையளித்த நிகழ்வு, தந்தையின் விருப்பத்திற்குத் தாழ்ச்சியுடன் பணிந்து, மீட்பிற்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்ததன் அடையாளமாக இருந்தது. இதன்வழி, தொன்மை வழிபாட்டு முறையை முழு நிறைவுக்குக் கொணர்ந்த உண்மையான பாஸ்கா செம்மறியாகக் காட்சியளிக்கிறார் இயேசு. இயேசுவின் செபம் அவரின் சீடர்களிடையே, குறிப்பாக, தூய பேதுருவில் புது வலிமையைத் தூண்டுவதாக உள்ளது. கிறிஸ்துவின் கட்டளைக்குப் பணிந்த வகையிலான நம் திருப்பலிக் கொண்டாட்டம், இறுதி இரவு உணவு செபத்தில் நம்மை மேலும் ஆழமான முறையில் இணைப்பதாக. மேலும், இயேசுவுடன் கொள்ளும் ஒன்றிப்பில் நம் வாழ்வை மேலும் முழுமையான விதத்தில் தந்தைக்குப் பலியாக வழங்க நம்மைத் தூண்டுவதாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.