2012-01-11 15:36:21

சனவரி 11, 2012. கவிதைக் கனவுகள்............. மேற்கிலும் உதயம் உண்டு


இளமை எனும் படிகளில் ஏறிடும் இளைஞனே!
எழுந்து நில்.
நீ விழுந்தெழுவது பாதாளம் அல்ல, படிகள் தாம்.
ஏனெனில் காலத்தையும் கைப்பிடித்து நடத்துபவன் நீ.
காலமும் காலை வெயிலாய் இதமளிக்கும் நீ,
மேற்கிலும் உதயத்தைக் கொணர வேண்டும்.
வானத்தையும் தாண்டி பறக்க இயலும் உனக்கு
தலைமேல் கூரை எதற்கு?
விதையாம் உனக்கு அறுவடைகள் காத்திருக்கின்றன.
தன் நிழலில் தான் மயங்கா கொக்கு நீ.
உனக்கான உறுமீன்கள் வருகின்றன.
சுற்றி இருள் என தயங்காதே.
முதலில் கண்களைத் திற.
உனக்குள்ளேயே தேடு உன் வாழ்வை.
சந்தனம் தன் மணத்தை சந்தைகளில் தேடுவதில்லை.
உன் உரிமைகளை கடமைகளில் கண்டுகொள்.
உன் விடுதலை உன் அருகில்தான்.
பூக்களும் பூங்காற்றும் புண்ணிய மனிதர்களும்
உன்னைச் சுற்றித்தான்.
பொருளாதாரமே வாழ்வாதாரமாகி
அதன் ஓரங்கள் ஈரமற்றுப்போனதில்
மனந்தளராதே.
இன்னும் இரசிப்பதற்கு நிறையவே இருக்கின்றன.
வயல் வெளிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
உன் நம்பிக்கையும் மிச்சமிருக்கின்றன.
மேற்கு என்பது அஸ்தமனம் அல்ல,
உன்னால் எமக்கு அதுவும் உதயம் தான்.








All the contents on this site are copyrighted ©.