2012-01-10 15:31:39

ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் : உருவாக்குகிறது இந்திய அரசு


சன.10,2012. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்று, நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தை, இருபதாயிரம் கோடி ரூபாய்ச் செலவில் உருவாக்க, இந்திய நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற, நூறு நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தால் நல்ல பலன் ஏற்பட்டதால், நகர்புற இளைஞர்களைக் கருத்தில் கொண்டு நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும், உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில், 9 கோடியே 30 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் பயிற்சி, சுயவேலை வாய்ப்பு போன்றவற்றை அளித்து, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள, இத்திட்டம் குறித்த விதிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.