2012-01-10 15:23:35

புதிய கர்தினால்கள் திருச்சடங்கில் மாற்றங்கள்


சன.10,2012. கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்படுவது, ஓர் அருளடையாளம் அல்லது ஏறக்குறைய அருளடையாளம் போன்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், வருகிற பிப்ரவரியில் நடைபெறும் 22 புதிய கர்தினால்கள் நிகழ்வுத் திருவழிபாட்டில் மாற்றங்கள் இடம் பெறும் என்று திருப்பீடச் சார்புத் தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியது.
புதிய கர்தினால்களாக உயர்த்தப்படும் திருவழிபாட்டுச் சடங்கில், இதுவரை இடம் பெற்று வந்தவைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அது எளிமையாக்கப்படும் என்று லொசர்வாத்தோரே ரொமானோ மேலும் கூறியது.
பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் திருவழிபாட்டுச் சடங்கில் புதிய கர்தினால்கள், சிவப்புத் தொப்பிகளையும், கர்தினால்களுக்குரிய மோதிரங்களையும், உரோமையில் அவர்களுக்கெனக் குறிக்கப்பட்ட ஆலயங்களின் பெயர்களையும் பெறுவார்கள் எனவும் அத்தினத்தாள் அறிவித்தது.
இந்நிகழ்வுக்கு அடுத்த நாள் வழக்கமாக இடம்பெறும் மோதிரம் பெறும் திருப்பலி, இவ்வாண்டு இடம்பெறாது என்றும் அத்தினத்தாள் கூறியது.
எனினும், பிப்ரவரி 19ம் தேதி புதிய கர்தினால்கள் திருத்தந்தையுடன் சேர்ந்து நன்றித் திருப்பலி நிகழ்த்துவார்கள் எனவும், கர்தினாலாக உயர்த்தப்படுவது ஒரு திருவழிபாட்டு நிகழ்வு என்ற எண்ணத்தைக் கொடுக்காமல், அந்நிகழ்வு, ஒரு செபச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியது.
கேரளாவின் சீரோ-மலபார் ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி உட்பட 18 பேராயர்கள், ஓர் ஆயர் மற்றும் மூன்று அருள்தந்தையர்கள், வருகிற பிப்ரவரி 18ம் தேதி கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.