2012-01-10 15:25:45

நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வன்முறைக்குப் பயந்து புலம் பெயரமாட்டார்கள், அந்நாட்டுக் கர்தினால் உறுதி


சன.10,2012. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில், போக்கோ ஹராம் என்ற இசுலாம் தீவிரவாத அமைப்பால் கிறிஸ்தவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல்கள் இருக்கின்ற போதிலும், அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் புலம் பெயரமாட்டார்கள் என்று அந்நாட்டுக் கர்தினால் Anthony Olubunmi Okogie உறுதி கூறினார்.
நைஜீரியத் திருஅவை, உறுதியாகவும் உயிர்த்துடிப்புடனும் இருக்கின்றது, அது அச்சுறுத்தலுக்குப் பயப்படாது என்று, Vatican Insider என்ற இதழுக்குப் பேட்டியளித்த Lagos பேராயர், கர்தினால் Okogie, இயேசு சிலுவையில் இறந்தது போல், நைஜீரியத் திருஅவையும் விசுவாசத்திற்காகத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது என்று கூறினார்.
போக்கோ ஹராம் என்ற இசுலாம் தீவிரவாத அமைப்பு, நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள பெரும்பான்மையான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் கர்தினால் எடுத்துக் கூறினார்.
இருந்த போதிலும், கிறிஸ்தவர்களை வன்முறைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கு அரசு விருப்பம் காட்டுவது போல் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவ்வன்முறைகளில் 30 பேர் இறந்தனர். தற்போது அந்நாடு முழுவதும் 24 மணிநேரம் ஊரடங்கு சட்டமும் போடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.